ஜெயலலிதாவின் கனவை நனவாக்க 4 ஆவது முறை மத்தியஅமைச்சர் நட்டாவைச் சந்தித்த திருப்பூர் எம்பி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது கொங்கு மண்டல மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கக் கூடியதாக அமையும் என்று திருப்பூர் தொகுதி அ இ அ தி மு க நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை 03-01-2018 அன்று நேரில் அணுகி கடிதம் கொடுத்துள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில்:

தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாகத் தேவை என்று மறைந்த முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது (ஈரோடு மாவட்டம் பெருந்துறை உட்பட).

பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி 327 ஏக்கர் பரப்பில் பசுமையாகப் படர்ந்துள்ளது. இது ஈரோடு கோயம்புத்தூர் நெடுஞ்சாலையிலிருந்து 20 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ளது. கோயம்புத்தூர், சேலம் மற்றும் பெருந்துறை நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 47 ஐ வெகு சுலபமாக அணுகும் வகையில் இந்த இடம் அமைத்துள்ளதோடு ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகளும் நோயாளிகள் சென்று வர சிறப்பாக அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை அமையுமானால் தமிழ்நாட்டில் மேற்கத்திய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்பதோடு கேரளா கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்களும் மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள். மருத்துவ வசதிக்கான தேவை பெருகி வரும் நிலையில் பெருந்துறையில் எயிம்ஸ் போன்றதொரு உயர் தரத்திலான மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைவது கொங்கு மண்டல மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கக் கூடியதாக அமையும்.

2018 குடியரசு தின விழா வரப்பிரசாதமாக ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறையில் எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை அமைய உத்தரவிடவேண்டுமென்று சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு வழங்கிய கடிதத்தில் சத்தியபாமா வலியுறுத்தியுள்ளார்.

இதன் பொருட்டு திருப்பூர் எம்.பி சத்தியபாமா அவர்கள் எடுத்த முயற்சிகள்:

13-8-2014, 19-07-2017, 27-12-2017 ஆகிய நாட்களில் பாராளுமன்றத்தில் பேசினார்.

08-08-2017 அன்று பிரதமர் நரேந்திரமோடிக்குக் கோரிக்கைக் கடிதம் கொடுத்தார்.

16-06-2017, 08-08-2017, 05-09-2017 ஆகிய தேதிகளில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ள நிலையில் நான்காவது முறையாக 03-01-2018 அன்று நேரில் அணுகிக் கடிதம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவேண்டும் என்கிற ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்ற இடைவிடாமல் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் சத்தியபாமாவுக்கு தொகுதி மக்கள் மட்டுமின்றி மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Response