தமிழர்களை இந்தி படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதா?- இந்திய அதிகாரிக்குக் கண்டனம்

நிறுவனங்களைப் பதிவுசெய்வது உள்பட நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநர் திரு. பி.கே.பன்சால், இந்திய அரசியல்சாசனம் மற்றும் இந்தியாவின் அலுவல் மொழிகள் சட்டத்தை மீறி இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். இதைக் கண்டித்து தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் சார்பில் அதன்ஒருங்கிணைப்பாளர்ஆழி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை…..
நேற்று சென்னை சாஸ்திரி பவனில் நிறுவனங்கள் விவகாரத்து துறை இந்தி நாள் கொண்டாடியிருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 14 இல்தான் இந்தி நாள் கொண்டாடப்படுவதுண்டு. ஆனால் இந்த முறை நிறுவனங்கள் துறை, செப்டம்பரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சாக்கு சொல்லி, நேற்று கொண்டாடியிருக்கிறது. அதில் பேசிய இயக்குநர் திரு. பன்சால் தமிழக ஊழியர்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறார். இந்தி தினத்தைக் கட்டாயமாக கொண்டாடவேண்டும் என்றும் இந்தி தெரியாத ஊழியர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் இந்தியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஆவணங்களில் இந்தியில்தான் குறிப்பெழுத வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இ்நதத் தகவலை இன்றைய நாளேடு ஒன்று செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

நிறுவன விவகாரத்துறையின் இந்த செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியதாகும். இந்திய அரசியல்சாசனம் இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே அலுவல் மொழி என்று கூறவில்லை. மாறாக ஆங்கிலத்தையும் அது ஏற்கிறது. அது மட்டும் போதாது, அனைத்து தேசிய இனங்களின் மொழியையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கவேண்டும் என்று கோரிக்கை இப்போது இந்தியா முழுவதிலும் வந்துகொண்டிருக்கிறது.

அதை விட முக்கியமாக, இந்தியாவின் ஆட்சி மொழிச் சட்டம் 1963 இன் கீழ் வகுக்கப்பட்ட, அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவலக நோக்கங்களுக்கான பயன்பாட்டுக்கானது) விதிமுறைகள் 1976 – Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976, மிகத் தெளிவாவே இந்தி அலுவல் மொழி என்பது தமிழகத்துக்கு பொருந்தாது என்று வரையறுத்திருக்கிறது. அதாவது இந்தி அலுவல் மொழியாக பயன்படும் இடங்கள் எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இந்தி அவ்வாறாக பயன்படுத்தப்படவேண்டியதில்லை என்பதே அந்தச் சட்டத்தின் கருத்தாகும்.

மத்திய அரசின் இணையதளத்தி்லேயே வெளியிடப்பட்டுள்ள அந்தச் சட்டத்தின் ஆங்கில நகலின் இணைப்பு:

http://deity.gov.in/…/official-languages-use-official-purpo…

விதிமுறைகளின் ஆவணத்தின் பிரிவு 1 இலேயே இந்த விதிமுறைகளானது இந்தியா முழுமைக்கும் பொருந்தும் என்றாலும் தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்பது அறிவுறுத்தப்பட்டுவிடுகிறது. அந்த வாக்கியம்:
They shall extend to the whole of India, except the State of Tamilnadu. (இவை இந்தியா முழுமைக்கும் பொருந்தும், தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக)
(இங்கே They என்பது விதிமுறைகளாகும்).

இன்னும் தெளிவாக எந்த எந்த அமைப்புகள் தமிழ்நாட்டில் இருந்தால் அவற்றுக்குப் பொருந்தாது? 2 (b) இல் கூறியவாறு, Ministry, Department or office of the Central Government, any office of a Commission, Committee or Tribunal appointed by the Central Government; and any office of a corporation or company owned or controlled by the Central Government – (மத்திய அரசாங்கத்தின் அமைச்சகம் அல்லது அலுவலகம், மத்திய அரசாங்கம் நியமிக்கும் எந்த ஒரு ஆணையமும் குழுவும் தீர்ப்பாயமும், மத்திய அரசாங்கத்துக்கு உடைமையான அல்லது அதன் கட்டுப்பாட்டிலிருக்கிற எந்த ஒரு தொழிற்கழகமும் தொழில்நிறுவனமும்) – ஆகிய அனைத்துக்கும் இந்த விதிமுறைப் பொருந்தும். இது 1963 சட்டத்தின் கீழ் வருவதால், இது சட்டபூர்வமான விதியாகும்.

இவ்வகையில், நிறுவனப் பதிவு துறை வலுக்கட்டாயமாக, சட்டவிரோதமாக இந்தியை தமிழ்நாட்டில் திணிக்கிறது. மிகவும் வன்மையான சொற்களில் தமிழக ஊழியர்களை திரு.பன்சால் மிரட்டியிருக்கிறார் என்பதும் செய்தியைப் பார்க்கும்போது தெரிகிறது.

அஞ்சல் நிலையங்களில், வங்கிகளில், ரயில்வே நிலையங்களில் எங்கெல்லாம் இந்தியை பயன்படுத்தப்படுகிறதோ. அங்கெல்லாம் இந்தச் சட்டம் மீறப்படுகிறது.

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் திரு.பன்சாலின் இந்தித் திணிப்பு முயற்சியை கடுமையாக கண்டிப்பதுடன், அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவலக நோக்கங்களுக்கான பயன்பாட்டுக்கானது) விதிமுறைகள் Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976) இ்ன் படி தமிழகத்தின் அனைத்து மத்திய அரசு அமைப்புகளும் இந்தியைப் பயன்படுத்துவதை தடைசெய்யவேண்டும் என்று கூறுகிறது.

1976 இல் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் குறித்து தமிழக அரசும் மக்களும் போதிய அளவுக்கு அறிவற்றவர்களாக இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். எண்ணற்ற உயிர்த்தியாகங்களையும் போராட்டங்களையும் நடத்தி நாம் பெற்ற வெற்றியின் ஒரு சிறு அடையாளமே தமிழகத்துக்கு கிடைத்த இந்த விதிவிலக்கு. வீரம் செறிந்த 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆண்டை நினைவுகூறும் இந்நிலையில், எந்த விதத்தில் இந்தி திணிக்கப்பட்டாலும் அதை முறியடிக்க நாம் போராடவேண்டும்.

 

Leave a Response