தமிழக அரசுப் பணியை பிறமாநிலத்தவர்க்கு தாரை வார்ப்பதா? – பெ.மணியரசன் கண்டனம்

தமிழ்நாடு அரசுப் பணியில் வெளி மாநிலத்தவர்களை நியமிக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,,,,

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் – தொழிற்சாலைகளில் தொடர்ந்து, தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் புகுத்தப்படுவதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டிலுள்ள பல்தொழில்நுட்பக் (Polytechnic) கல்லூரிகளில் உள்ள 1058 விரிவுரையாளர் காலிப் பணியிடங்காக “ஆசிரியர் தேர்வு வாரியம்” (Techers Recruitment Board) வழியே கடந்த 16.09.2017 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சற்றொப்ப 1,33,567 பேர் அதில் பங்கேற்றனர். அத்தேர்வின் முடிவுகள் கடந்த 07.11.2017 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

வழக்கமாக தேர்வு முடிவுகளின்போது பதிவு எண், பிரிவு மதிப்பெண் ஆகியவற்றுடன் பெயரையும் இணைத்து வெளியிடப்படும் தேர்வுப் பட்டியல், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பெயர்கள் மறைக்கப்பட்டு, வெறும் பதிவு எண், மதிப்பெண், பிரிவு ஆகியவை மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது, ஐயங்களைக் கிளப்பியது.

இதனையடுத்து, சந்தேகமுற்ற மாணவர்கள் அந்த பதிவு எண்கள் பலவற்றை தனித்தனியே எடுத்து அவர்களின் பெயர்களைப் பார்த்தபோது, அவற்றில் பெரும்பாலானவை குப்தா, ரெட்டி, சர்மா, நாயர், சிங், பாண்டே என்ற பின்னொட்டுடன் கூடிய வெளி மாநிலத்தவர்களின் பெயர்களாகவே இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு நடைபெற்றபோதே, வெளி மாநிலங்களிலிருந்த வந்திருந்த பலர் சென்னை (PT32) தேர்வு மையத்தில் தேர்வெழுதியதை தமிழ்நாட்டு மாணவர்கள் பலர் எச்சரிக்கையுடன் வெளிப்படுத்தினர். இப்போது, அந்த ஐயம் உண்மையாகியுள்ளது!

இதே ஆசிரியர் தேர்வு மையம் கடந்த 31.05.2017 அன்று, பட்டதாரி ஆசிரியர் மற்றும் சிறப்புப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டபோது, பதிவு எண்ணுடன் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர். அதற்கு முன்பு 27.04.2017 அன்று அரசுப் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிவதற்கான துணைப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளிலும், பதிவு எண்ணுடன் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு (23.11.2016) வெளியான விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில்கூட, பதிவு எண், பிரிவு மட்டுமின்றி பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது வெளியிடப்பட்ட பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெறும் பதிவு எண் மற்றும் அவர்களது பிரிவு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களின் பெயரை ஏன் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை? பெயர்களைப் போட்டால், அவர்கள் வெளி மாநிலத்தவர் எனத் தெரிந்துவிடும் என்பதால், இது திட்டமிட்டு செய்யப்பட்டதா?

இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) துறைக்கு 219 விரிவுரையாளர்கள் தேவை என்ற நிலையில், அதில் பொதுப்பட்டியலுக்கான 67 இடங்களில் 46 பேர் வெளி மாநிலத்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதாவது, இத்துறையின் கீழ் தமிழ்நாட்டு மண்ணின் மக்களுக்கு பொதுப்பட்டியலில் கிடைக்க வேண்டிய இடங்களில் 68 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

அதேபோல், மின்னணு தொடர்பியல் (ECE) துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில், பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர் ஆவர். அதாவது, இத்துறையின் கீழ் தமிழ்நாட்டு மண்ணின் மக்களுக்கு பொதுப்பட்டியலில் கிடைக்க வேண்டிய இடங்களில், 86 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறைக்கு எடுக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் வெளி மாநிலத்தவர்!

இதுபோல் ஒவ்வொரு துறையிலும் வெளி மாநிலத்தவர்கள் நிறைந்துள்ளனர். இந்த இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டின்படியான இடங்களிலும் இவர்கள் ஆங்காங்கு உள்ளனர். அதையும் கணக்கிட்டால், இந்த விகிதம் இன்னும் அதிகமாகும்!

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவர்கள் பலரும் பொதுப்பிரிவில் வந்திருப்பதாகச் சொன்னாலும், தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு உரிய பிரிவுகளின் கீழம் பல வெளி மாநிலத்தவர்கள் தேர்வாகியுள்ளனர். அதன்காரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் இடங்கள் வெளிப்படையாகவே தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது!

இவ்வாறு தேர்வான வெளி மாநிலத்தவர்கள், வரும் 23.11.2017 அன்று நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டிலுள்ள 30க்கும் மேற்பட்ட அரசுத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இவர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். ரூபாய் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இவர்களுக்கு மாத ஊதியம்!

பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருப்பினும், தமிழ்வழிக் கல்வியில் பயின்றுவிட்டு சேரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வின்போது அவர்கள் தமிழிலும் எழுதலாம் என்ற நடைமுறை உள்ளது. இவ்வாறு எழுதுபவர்களில் கணிசமானவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் ஆவர். இனி, தமிழேத் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் விரிவுரையாளர்களாகப் பணியமர்த்தப்படுவதால், இந்த உரிமை அடியோடு ஒழிக்கப்படும்! தமிழில் நடத்தப்படும் பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆங்கிலமும் பேசத் தெரியாத வெளி மாநிலத்தவர் இருப்பின், அந்த வகுப்பு மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறிதான்! எனவே, இந்த நியமனங்கள் காரணமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும்! பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் வினாக்குறியாகும்!

தமிழ்நாட்டின் மீது இந்திய அரசால் சூழ்ச்சியுடன் திணிக்கப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் வெளி மாநிலத்தவருக்குத் தாரை வர்க்கப்பட்ட நிலையில், இப்போது தமிழ்நாடு அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாநில அரசே வெளி மாநிலத்தவரைப் பணியில் அமர்த்த முயலும் செயல் கடும் கண்டனத்திற்குரியது!

குசராத்தில் 1995லிருந்தும், கர்நாடகாவில 1986லிருந்தும், மேற்கு வங்கத்தில் 1999லிருந்தும் என – தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டமியற்றப்பட்டுள்ளது. இந்தியத்தேசியம் பேசும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலுள்ள இந்தியத் தலைநகர் தில்லியில், தில்லிப் பல்கலைக்கழகத்திலும், அதில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் 85 விழுக்காட்டு இடங்கள் அம் மாநிலத்தவருக்கே வழங்க வேண்டுமென சூலை 2017 மாதம், தில்லி சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்திய அரசுப் பணிகளில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவது மண்ணின் மக்களுக்கு இழைக்கப் படும் மாபெரும் அநீதியும், துரோகமும் ஆகும்!

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இதே நிலையில், வரும் 23.11.2017 அன்று நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்புப் பணியை நடத்தக்கூடாது! தமிழ்நாடு அரசுப் பணிகளில், தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கே 100 விழுக்காட்டு இடங்களை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response