அறம் – திரைப்பட விமர்சனம்


ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே ‘அறம்’.

ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அருகில் உள்ள ஒரு எல்லைப்புற கிராம மக்களின் கதை. ஒரு கிராமத்தில் ஏற்படக்கூடிய தண்ணீா் பிரச்சினை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட கதை. அதன் தொடர்ச்சியாக உருவாகக்கூடிய பல்வேறு பிரச்சனைகளில் ஒரு பிரச்சனையை கையில் எடுத்து,கொண்டு ஒரு விறுவிறுப்பான திரில்லரை கொடுத்திருக்கிறார் கோபி நயினார்.

காட்டு வேலைக்குச் செல்லும்போது தன் நான்கு வயது மகள் தன்ஷிகாவையும் உடனழைத்துச் செல்கிறாள் சுமதி. எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தை, அங்கு தோண்டப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்துவிடுகிறது.

குழந்தையை மீட்கும் பணியில் ஒரு மாவட்ட ஆட்சியர் நேரடியாக களத்தில் இறங்குகிறார். பொதுமக்கள், அரசியல்வாதிகளிடமிருந்து வரும் அழுத்தங்களையும் மீறி அந்தக் குழந்தையை மீட்கிறார் மாவட்ட ஆட்சியர் மதிவதனி (நயன்தாரா).

ஏழ்மையை வைத்து ஆரம்பித்த படம் , போகப் போக நம்மையும் அந்த காட்டூர் கிராமத்துக்கே அழைத்து சென்றுவிடுகிறது. குழந்தையை மீட்கும் அந்தத் தருணங்கள், அதில் நயன்தாரா காட்டும் இயல்பான, உண்மையான அர்ப்பணிப்பு நம்மை பரபரப்பின் உச்சிக்கே அழைத்து செல்கிறது.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தைகள் விழுந்தால் என்னவெல்லாம் நடக்கும், மீட்பதில் இருக்கும் பிரச்சனைகள் என ஒவ்வொன்றையும் துல்லியமாக கண் முன் கொண்டுவருகிறார் இயக்குனர்.

இரண்டே உடைகளில் தான் படம் முழுக்க நடித்திருக்கிறார் நயன்தாரா. ஒரு முன்னணி நடிகை இதற்கு ஒப்புக்கொண்டதற்கே பலத்த கைதட்டல் குடுக்கலாம்.

ஈ ராமதாஸ், முத்துராமன், விக்னேஷ் படத்தின் பாத்திரங்களாகவே உருவாகிவிட்டார்கள். உயிரோட்டமான கதைக்களத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் மூலம் தரமான சினிமாவைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

நான்கு வயது சிறுமி மகாலட்சுமியின் நடிப்பு தகுதிவாய்ந்தது. காக்கா முட்டை ரமேஷ், விக்னேஷ் தத்தம் பாத்திரம் உணர்ந்து தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

நேர்மை, துணிச்சல், உண்மை என மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் கம்பீரம் பளிச்சிடுகிறது.

இப்படத்தில் வரும் விவாத நிகழ்ச்சிளை குறைத்து கொண்டிருக்கலாம். அந்தக் காட்சிகள் இல்லாமலிருந்தால் படம் இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும்.

#அறம் ஒரு தரமான படம்! – பிரியா குருநாதன்

Leave a Response