எச்.ராஜாவைக் கேள்வி கேட்டதால் விஷாலுக்கு ஜிஎஸ்டி சோதனையா?

சென்னையில் உள்ள நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய கலால் வரித்துறையின் கீழ் உள்ள ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சில மணி நேரமாக இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

விஷாலின் தயாரிப்பு நிறுவனம் ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்துகிறதா, மறைமுகமாகச் செலுத்துகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் விஷால் தரப்பினர் ஆவணங்களைச் சரிபார்க்க வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த திடீர் சோதனையின் போது விஷாலும், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரும் அங்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

அண்மையில் மெர்சல் படத்துக்கு பாஜக நெருக்கடி கொடுத்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து நடிகர்சங்கச் செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் என்ற அடிப்படையில் விஷாலும் கண்டனம் தெரிவித்தார்.

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பதா? என்றும் கேட்டிருந்தார் அதனாலேயே இச்சோதனை நடைபெறுவதாகப் பலரும் நினைக்கிற நேரத்தில் அதை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Response