அன்புள்ள முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு – வெறுப்புடன் ஒரு துயர்மனிதன் கடிதம்

அன்புள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு,

வணக்கம் !

உங்களால் ஆளப்படும் தமிழகத்தின் துயர்மிகு மக்களில் நானும் ஒருவன்.

நாட்டு நிலைமை தெரியாத நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டதால் தான் இந்தக் கடிதம்.

அதிலும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் நடத்தும் ‘தங்களது’ மனமகிழ் நிகழ்ச்சியில், நீங்கள் நிகழ்த்தும் உரை தான் இந்த எண்ணம் ஏற்படக் காரணம்.

அதிலும் இன்று கரூரில் ஆற்றிய உரை அதற்கெல்லாம் உச்சம். அரசு பணத்தில், மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் விழா அது.

எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிப்பது, தினகரனுக்குப் பதில் அளிப்பது என்று இருந்த நீங்கள் இன்று இன்னும் கூடுதலாக சாமியாடினீர்கள்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்துப் பேசி முண்டா தட்டினீர்கள். அவருக்கு ஓட்டுக் கேட்டதற்காக வெட்கப்பட்டீர்கள். அவர் தரத்தை எடை போட்டீர்கள். உங்களை அவர் எதிர்ப்பதால் இப்படிப் பேசுகிறீர்கள். இது எல்லாம் உங்கள் கட்சி விவகாரம்.

இதற்கு பத்து கோடி ரூபாய் அரசுப் பணத்தை செலவு செய்து கூட்டம். அதற்குப் பள்ளி மாணவர்களை அழைத்து வர உயர்நீதிமன்றத்திடம் கெஞ்சல். நூறு நாட்கள் பணியில் இருக்கும் பெண்களை அழைத்து வந்து பந்தலை நிரப்பல்.

இப்படி எல்லாம் கூட்டம் கூட்டி, சொந்தப் பிரச்சினை பேசுவதற்கு ஒரு முதல்வர் நாட்டிற்கு தேவையா?

மோடி மாதிரி மங்கி பாத், பிஸிபேளா பாத்ன்னு ரேடியோ, எஃப்.எம்மில் பேசலாம். அல்லது வாட்ஸ் அப்பில் பேசி செந்தில் பாலாஜிக்கே அனுப்பலாம். பதில் கேட்டு மகிழலாம்.

மக்களை விடுங்கள், உங்கள் மந்திரிகளே உங்கள் பேச்சைக் கேட்டு, நெளிந்து கொண்டு அமர்ந்திருக்கும் காட்சியை தொலைக்காட்சி கிளிப்பிங்ஸ்களை வாங்கிப் போட்டுப் பாருங்கள்.

தொலைக்காட்சிகளில் சவசவ ஆவடிக்குமார், வவ்வால் மீசை பழனிச்சாமி, பெரியவர் சமரசம் செய்யும் மொக்கைகளைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது உங்கள் விழா பேச்சுகள்.

இதில் ஜெயலலிதா என உங்களையே நீங்கள் எண்ணிக் கொண்டு குட்டிக்கதை சொல்லிக் கொல்லுவது வேறு.

கூட்டத்தில் இருப்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு மயங்கி அமர்ந்திருப்பதாக மாத்திரம் எண்ணி விடாதீர்கள். உயர் அதிகாரிகளுக்காக, கீழ் அதிகாரிகளும், அவர்களுக்காகப் பணியாளர்களும், பட்டுவாடாவுக்காக மற்றவர்களும் அமர்ந்திருக்கும் நிலை.

இன்றைய தேதியில் உங்கள் கம்பெனியில் ரேட்டிங் ஹெவியாக இருப்பது, அண்ணன் திண்டுக்கல் சீனிவாசனுக்கு மாத்திரம் தான்.

அவர் தான் இப்போ சரவெடி. தலைக்கு மேல் கைக்கூப்பி ‘மன்னிப்பு’ கேட்பதாக இருந்தாலும், ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை எனப் பற்ற வைத்ததாக இருந்தாலும், வெஜ் சாப்பிட்டால் இளைக்கலாம் என டிப்ஸ் தருவதாக இருந்தாலும், பத்து மாதத்திற்கு முன் இறந்த ஜெ ஆறு மாதம் முன் ‘நிலவேம்பு கஷாயம்’ குடிக்கச் சொன்னதாகக் குண்டு போடுவதானாலும் அவர் தான் கலக்கி எடுக்கிறார்.

அமைச்சர்கள் வெறும் பேச்சாக இருக்க, தினம் தினம் தங்கள் மார்க்கெட் நிலவரத்தை உரசிப் பார்த்துக் கொள்ளும் நிலையில் உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள்.

அரசின் ஒரு துறையும் இயங்கவில்லை. ஜாக்டோ- ஜியோ போராட்டம், போக்குவரத்துத் தொழிலாளர் போரட்டம் என அரசு ஊழியர்கள் முற்றுகை. ஒரு டிபார்ட்மெண்ட் மாத்திரம் அசுர வேகத்தில், டாஸ்மாக் தான். நீதிமன்ற உத்தரவு கிடைத்த அடுத்த நொடி, பழைய கடைகள் அத்தனையும் திறந்தாச்சி.

உங்க இம்சை பத்தாதுன்னு, டிமானிடிஸேஷன், நீட், ஜி.எஸ்.டி என வச்சி செய்யும் உலகம் சுற்றும் பிரதமர் அய்யா மோடி.

ஊரே டெங்கு வந்து மருத்துமனை வாசலில் தவம் கிடக்கிறது. அரசாங்கம், கோர்ட்டு வாசல்களில் தலைகுனிந்து நிற்கிறது. உங்கள் கட்சியின் ஒரு குழு எம்.எல்.ஏக்கள் தலைமறைவாக இருக்கும் சூழல். உங்கள் மந்திரிகளோ ஊடக மைக் முன் பிதற்றி நிற்கும் காட்சி. ஆனால், நீங்களோ மேடை ஏறி பொளந்துக் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆட்சி, அதிகாரம் உங்கள் கண்ணை மறைக்கிறது. மிதமிஞ்சிய பணம் முறுக்கேற்றுகிறது. மத்திய அரசின் துணை எதை வேண்டுமானாலும் பேச வைக்கிறது.

அது தான் அரசு மேடையில் நின்று கொண்டு “யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது” என்று கூவுகிறீர்கள்.

உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் பதவியையே பறித்து தைரியம் கொள்கிறீர்கள். எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பதவியைப் பறித்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என மனப்பால் குடிக்கிறீர்கள். அடுத்த மாநிலம் வரை சொந்தக் கட்சிப் பிரச்சினைக்காக காவல் துறையை ஏவுகிறீர்கள். அவதூறு வழக்கு தாண்டி தேச விரோத வழக்கு வரை பாய்ச்சி எதிரிகளை மிரட்டப் பார்க்கிறீர்கள். அதிகார போதை தலைக்கேறி விட்டது.

உங்களுக்கு ஒரு விஷயத்தை மாத்திரம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆயிரம் இருந்தாலும் இது “இரவல்” பதவி. ஜெயலலிதா மறைந்த காரணத்தால், அதற்குப் பிறகு வந்த ஓ.பி.எஸ் மீது நம்பிக்கை குறைந்ததால் சசிகலா போட்ட பதவி. இரந்து பெற்ற இரவல் பதவி.

இந்த இரவல் பதவியில் இருந்து கொண்டு ஒரு மாபெரும் இயக்கத்தின் செயல் தலைவராகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குச் சவால் விடுகிறீர்கள். மிசாவில் பயணம் துவங்கியவர் அவர். உங்களை மாதிரி கொலை வழக்கில் அரசியல் பயணம் துவங்கியவர் அல்ல.

இந்த மாதமோ, இந்த வருடமோ, என்றோ ஒரு நாள் முதல்வர் பதவியில் இருந்து இறங்குவீர்கள்.

அந்த நாளில், அந்த நொடியில் உங்கள் வாகன ஓட்டுனரைத் தவிர யாரும் உங்களோடு இருக்கப் போவதில்லை.

இது தான் நிதர்சனம்.

தலைகால் தெரியாமல் ஆடாதீர்கள், ஆனானப் பட்டவர்களையே அசைத்துப் பார்த்தது தான் மக்கள் சக்தி.
நீங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் காணாமல் போய் விடுவீர்கள்.

வெறுப்புடன்,
எஸ்.எஸ்.சிவசங்கர்.

Leave a Response