பிக்பாஸ் நிகழ்ச்சியின் உச்சம் எது தெரியுமா?

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் பிக்பாஸ் அளவிற்கு எந்தவொரு ரியாலிட்டி ஷோவும் பரபரப்பைக் கிளப்பியதில்லை. விஜய் டிவியும் கமலும் அதை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம் தான்.

பிக்பாஸில் ஓவியாவைப் பார்ப்பதே சந்தோசம் தான். மீண்டும் அதே உற்சாகத்துடன் அவரை இறுதிநாளில் பார்க்க முடிந்தது. அவர் மீண்டும் உள்ளே போட்டிக்கு வராமல், ஃபைனலுக்கு மட்டும் வந்தது நல்ல முடிவு. இறுதிவரை கெத்துடன் இருக்க முடிந்தது. அந்த ‘ஓ..மை காட்’-ஐ கேட்டபோது தான்……சில உலக சினிமாக்கள் ஞாபகம் வந்தது! அதுவும் நல்லாத்தானே இருந்துச்சு!

ஓவியா வெளியேறியபின் பலர் பிக்பாஸ் பார்க்கவில்லை. ஆகவே என்னுடைய ரேட்டிங், சிநேகன்>கணேஷ்>ஆரவ் என்று இருந்தது.
சிநேகனுக்குள் ஒரு இளகிய மனது இருக்கிறது. அதுவொரு அழகிய கிராமத்து மனது. ஆரம்பத்தில் இருந்து எந்தவொரு பிரச்சினை என்றாலும் முன்னால் நிற்பது, யாருக்கு ஆறுதல் தேவைப்பட்டாலும் கட்டிக்கொள்வது, அனைத்து டாஸ்க்கையும் விருப்பத்துடன் செய்வது, ஒரு தாயுமானவனாக இருந்து பலமுறை சமைத்துப் போட்டது, ஓவியா வெளியேறியபோது கலங்கியது என பல பாசிடிவ் விஷயங்கள் சிநேகனிடம் இருந்தன.

அம்மா மறைவுக்குப் பின் நான் ஊருக்குப் போவதேயில்லை. அந்த வெறுமையைத் தாங்க முடியாது.போனாலும் சில நிமிடங்களில் ஓடிவந்துவிடுவேன். அதையே கமலிடம் சிநேகனும் சொன்னபோது, என் மனதுக்கு நெருக்கமானவராக சிநேகன் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் உச்சம், சிநேகனின் அப்பாவின் வருகை. நண்பர் ஒருவர் சொல்லி, அந்த எபிசோடை மட்டும் பார்த்தேன். ஒரு டிவி நிகழ்ச்சி பார்த்து, நான் கண்கலங்கி அழுதது அப்போது தான். நெஞ்சைக் கலங்கடித்த நிகழ்வு அது.

அவரது கட்டிப்பிடி வைத்தியம் பற்றி நாம் கிண்டல் செய்தாலும், அவரால் கட்டிப்பிடிக்கப்பட்ட யாரும் அதைப் பற்றி புகார் சொன்னதில்லை. குட் டச், பேட் டச்’ தெரியாத குழந்தைகள் அல்ல அவர்கள். அதில் இருக்கும் அன்பை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஓவியா ஒருமுறை ‘நீங்க யாரு, லீடரா?’ என்று திட்டிய கொஞ்சநேரத்தில், மழையில் கிடந்த ஓவியாவை நோக்கி ஓடினார் சிநேகன். நானாக இருந்தால்கூட, கிடக்கட்டும் என்று விட்டிருப்பேன்.

இருப்பினும்…
சுஜா வந்தபின் சில டாஸ்க்களில் சிநேகன் நேர்மையாக நடக்கவில்லை என்றும், இறுதியில் ஓட்டுக்காக பரிதாபத்தை தூண்டும் வேலைகளை அவர் செய்ததாகவும் தொடர்ந்து பார்த்த நண்பர்கள் சொன்னார்கள். அதுவே அவரை வின்னர் ஆகாமல் தடுத்திருக்கலாம்; அல்லது விஜய் டிவியின் வழக்கமான சித்துவேலையாகவும் இருக்கலாம்.

புதிதாக வந்த ஹரீஷ் ஒரு ஜெண்டில்மேன், வின்னர் ஆகத் தகுதியானவர் என்பது பலரின் கருத்தாக இருந்தது. நேற்று ஹரீஷே சொன்னது போல், 100 நாட்கள் உள்ளே இருந்தவர் வின்னர் ஆவது தான் நியாயம். எனவே சிநேகனும் ஆரவ்வும் இறுதியில் மிஞ்சியது சரிதான்.

ஓவியா விஷயத்தில் ஆரவ் மீது நமக்கு கோபம் தான். நேற்று வந்திருந்த கூட்டத்தில் ஆரவ்வுக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்தன. ஒருவேளை ஓவியா வெளியேறியபின், ஆரவ்வின் நடவடிக்கைகள் ஆடியன்ஸுக்கு பிடித்திருக்கலாம். ஆரம்பத்தில் அவர் நல்லவராகவே இருந்தார்; அந்த நல்ல இயல்பு மீண்டும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எப்படியோ, ஆல் தி பெஸ்ட் ஆரவ்!
இருப்பினும், ஐ லவ் சிநேகன்.

-செங்கோவிகுரு

Leave a Response