தெலுங்கு மொழி கட்டாயம், இதை ஏற்கும் பள்ளிகளுக்கே அங்கீகாரம் – சந்திரசேகரராவ் அதிரடி

தெலங்கானாவில், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டு, செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாகப் பேசிய அவர்,தெலுங்கு மொழி விவகாரத்தில்,பள்ளிகளுக்கு வேறு வழியில்லை. நமது தாய்மொழியான தெலுங்கை அவர்கள் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளிக்காது என்றார்.

அதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே மாதிரியான தெலுங்கு மொழிப் பாடப் புத்தகத்தைத் தயாரித்து வழங்க வேண்டும் என்றும் தெலுங்கு சாகித்ய அகாடமிக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றும், அவற்றை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்திலும் இப்படிச் சொல்லி நடைமுறைப்படுத்துவார்களா?

Leave a Response