தெலுங்கானா 4 பேர் சுட்டுக்கொலை – சீமான் கருத்து

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு! இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சை கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும். கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 06-12-2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார். .அதனைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, விருகை இராஜேந்திரன், குருதிக்கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அரிமா நாதன் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசினார் சீமான்…..

“ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர் நொடி வாழ்ந்து சாவது மேலானது” என்று கற்பித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று.

“அறிவைத் தேடி ஓடுங்கள்! நாளைய வரலாறு உங்களை தேடி ஓடிவரும்” என்ற அறிஞர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை.

“நான் யாருக்கும் அடிமை இல்லை. எனக்கும் யாரும் அடிமையில்லை” என்று கற்பித்த சமத்துவ நாயகன்.

“சாதியக் கொடுமைகளை எதிர்த்துப் போராடாமல் இருப்பதைவிட செத்து ஒழிவதே மேலானது” என்று முழங்கிய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் இன்றைய காலத்தேவை மட்டுமல்ல; என்றைக்குமான காலத்தேவை.

குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் எழுகிற சாதிய ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குகிற வலிமை மிக்க சம்மட்டியாக அண்ணல் அம்பேத்கரை நாங்கள் பார்க்கிறோம்.

பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டு தாழ்தளத்தில் வீழ்ந்துகிடக்குற தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகள் உலகங்கெங்கும் மானுட விடுதலைக்குப் போராடிய புரட்சியாளர்களின் வழியிலே எம்மின விடுதலைக்கான அரசியல் புரட்சியை முன்னெடுக்கிறோம். அதில் மிகவும் வலிமை மிக்க வழித்தடமாக அண்ணல் அம்பேத்கரை நாங்கள் பார்க்கிறோம். அவரது கொள்கைகளை ஏற்கிறோம்.

சாதிமதப் பிளவுகள்தான் சமநிலை சமூகம் அமையாது ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும் தன்னினப்பகையை மூட்டி அந்த தேசிய இனங்களைப் பிரித்து கையாண்டு வீழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகள் அண்ணல் அம்பேத்கர் வழியிலே பயணித்து உரிமையிழந்து அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் என அவரது நினைவுநாளில் உறுதியேற்கிறோம். அந்த மாமேதைக்கு புரட்சி வணக்கத்தைச் செலுத்துவதில் நாம் தமிழர் பிள்ளைகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

கேள்வி: ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அறித்துள்ளதே?

இப்படி தனித்தனியாக தேர்தலை நடத்துவதன் மூலம் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்ப்படுத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல், நாடாளுமன்ற இடைத்தேர்தல், மீண்டும் சட்டமன்ற இடைத் தேர்தல் என தொடர்ந்து தேர்தல்களை வைத்து மக்களிடம் வெறுப்பான மனநிலையை உருவாக்கியுள்ளது. இதை தேர்தல் ஆணையம் தவிர்த்திருக்க வேண்டும். இருப்பினும் எங்களைப் பொறுத்தவரை தேர்தல் எப்போது வந்தாலும் போட்டியிட ஆயத்தமாக உள்ளோம்.

கேள்வி: வெங்காய விலை உயர்வு பற்றிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று பதிலளித்துள்ளாரே?

அவர்கள் மாட்டுக்கறி கூடத்தான் சாப்பிடுவதில்லை. சாப்பிடும் எங்களை ஏன் சாப்பிடக் கூடாது என்று தடைபோடுகிறார்கள்?. நீங்கள் சாப்பிடாத வெங்காயம் உங்களைப் பாதிக்காத போது, நீங்கள்.சாப்பிடாத மாட்டுக்கறியும் உங்களைப் பாதிக்காதுதானே..?
ஒரு பொறுப்புள்ள அமைச்சர் சொல்லும் பதிலா இது? மற்றொரு மத்திய அமைச்சர் இவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும்போது ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியடைந்துவிட்டதாக எப்படிக் கூற முடியும் என்று கேட்கிறார்? எப்படிபட்ட அமைச்சர்களை நாம் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம் என்பதைக் கற்றறிந்த இளையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கேள்வி: தெலுங்கானாவில் பெண்மருத்துவரை கூட்டு வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற நான்கு குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது பற்றி?

அதனை நான் வரவேற்கிறேன். மரணம் என்பது எந்த ஒரு குற்றத்திற்கும் தண்டனையாக இருக்கக்கூடாது என்று போராடும் பிள்ளைகள் நாங்கள். இருப்பினும் பெண்களை ஒரு போகப் பொருளாக, போதைப் பொருளாக , நுகர் பொருளாகக் கருதி வன்புணர்வு செய்யும் அந்தச் செயலுக்கு மரணத்தைத் தவிர வேறு தண்டணை இருக்க முடியாது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 90 நாட்களில் குண்டாசை ரத்து செய்து வெளியே விடுவது என்பது வரலாற்றுப் பெரும்பிழை. குழந்தைகளை வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கும் இதுபோன்ற தண்டனைகள் தரப்பட்டால்தான் அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு அச்சம் பிறக்கும். அதனால் இதை நாங்கள் வரவேற்கிறோம். நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதை போன்ற தண்டனைகளே வழங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response