ஈழத்தில் கண்டற் காடுகள். சவுக்குக் காடுகளைக் காணவில்லை- அதிரவைக்கும் சூழலியல் அமைச்சர்


இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு கடற்கரை சார் சூழலியல் திட்டங்கள் பற்றிய முன்னேற்ற மீளாய்வு நிகழ்ச்சி புதன்கிழமை (11.03.2015) நடைபெற்றது.
யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணத்தின் தரை மயோசின் காலத்துச் சுண்ணாம்புப் பாறைகளால் ஆனது. நொய்தலான இந்தச் சுண்ணாம்புத்தரை காரணமாகவே பெய்கின்ற மழைநீர் முற்றாகக் கடலுக்குள் வடிந்தோடிவிடாமல் நிலத்தடி நீராகக் கீழே தேங்குகின்றது. யாழ்ப்பாணத்தில் எமது இருப்புக்கு, இந்த நிலத்தடி நீர்தான் காரணம். ஆனால், வரப்பிரசாதமாக அமைந்த சுண்ணாம்புப் பாறைகள் அதன் நுண்துளைகளினூடாக மாசுக்களையும் கீழே கசிய விடுகின்றது.
நாம் மேற்கொள்ளும் செறிவு வேளாண்மையில் அளவுக்கு அதிகமான இரசாயன உரங்களையும் பீடைகொல்லி நஞ்சுகளையும் பயன்படுத்தி வருகிறோம். இந்த நஞ்சுகள் கடைசியில் நிலத்தடி நீரைச் சென்றடைகின்றன. முறையான கழிவகற்று வசதிகள் இல்லாததால் மலக்கிருமிகள் நிலத்தடி நீரில் குடியேறுகின்றன. இவை போதாது என்று இப்போது தண்ணீரில் எண்ணெய் மாசும் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஒருபுறம் நிலத்துக்குக் கீழே சூழலியல் அனர்த்தங்கள் நிகழ்ந்தேறும்போது, இன்னொருபுறம் நிலத்துக்கு மேலேயும் பெரும் சூழலியற் படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன.
கரையோரத்தில் பாதுகாப்பு அரண்களாக விளங்கி வந்த மணல் மேடுகளில் பெரும் பங்கு கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. கடற்கோள் தடுப்புச் சுவர்களாக விளங்கும் கண்டல் காடுகளும், சவுக்குக் காடுகளும் விறகுத் தேவைகளுக்காகக் காணாமற் போய்க்கொண்டிருக்கின்றன.
யுத்த காலத்தில் இந்த அழிவுகளைத் தடுக்கமுடியாது போயிருந்திருக்கலாம். ஆனால், இனிமேலும் இவை தொடர்ந்தால் நாம் சூழலியல் அகதிகளாக இடம் பெயர்வது தவிர்க்க முடியாததாகிவிடும். ஐக்கியநாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் புள்ளிவிபரங்களின்படி சூழல் அகதிகளாக உலகளாவியரீதியில் தற்போது 10.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 50 மில்லியன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குள் ஒருவராக நாம் அடங்கிவிடக் கூடாது.
சூழல்நெருக்கடிகள் வரும்போது அதற்குள் சில சமயங்களில் அரசியலும் ஒரு மாசாகக் கலந்துவிடும் அபாயம் உள்ளது. இதற்கும் நாம் இடமளித்துவிடக் கூடாது. சூழலில் அரசியல்மாசு நிலைமைகளை மேலும் விபரீதமாக்கி விடும்.
அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதன்மூலமே எமது இயற்கை வளங்களையும், அதன் பாதிப்புகளையும் சரியான முறையில் மதிப்பீடு செய்யமுடியும். இயற்கை வளங்களைப் பாதுகாத்து அதன் பயன்களை நுகரமுடியும். இதற்கான ஒரு முன்மாதிரியாகவே இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் இந்த முன்னேற்ற மீளாய்வு நிகழ்ச்சியில் நாம் அனைவரும் கலந்துகொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Response