அலையாத்திக் காட்டில் வாழும் தமிழ் – வனத்துறையினருக்குப் பாராட்டு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் ஆறுகளும், கடலும் ஒன்று சேரும் பகுதியில் 1 இலட்சத்து 2020 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் உள்ளன. இங்குள்ள மரங்களைப் பராமரிக்கும் பணியை வனத்துறை மேற்கொண்டு வருவதுடன், அவ்வப்போது வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, 2023- 24 ஆம் நிதி ஆண்டில் துறைக்காடு என்ற இடத்தில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட அலையாத்திக் காட்டில், ‘தமிழ் வாழ்க’ என்ற சொல்லின் வடிவில், 555 மீட்டர் நீளத்துக்கு, 152மீட்டர் அகலத்தில் கரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் 65 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்களின் கரைகளில், கருங்கண்டல் வகை அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதுதொடர்பான புகைப்படத்தை வனத்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் எல்சிஎஸ்.ஸ்ரீகாந்த் கூறியதாவது….

‘தமிழ் வாழ்க’ என்ற வடிவமைப்பை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன், திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் ந.சதீஷ் ஆகியோர், அவ்வப்போது நேரடியாகவும், தலைமை இடத்தில் இருந்தும் வழங்கிய ஆலோசனைகளையும் பெற்று, கள ஆய்வு செய்து முத்துப்பேட்டை வனச்சரகர் ஜனனி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை ஈடுபடுத்தி இந்த அலையாத்திக் காட்டுக்கு புதிய தோற்றம் தமிழ் எழுத்துகளால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த அலையாத்திக் காட்டைப் பாதுகாக்க வேண்டும் என்கின்ற உணர்வை ஏற்படுத்த இந்த வடிவமைப்பு உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வு தமிழ் ஆர்வலர்களிடமும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இதைச் சிறப்பாகச் செய்த வனத்துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Response