ராஜதந்திரம் – திரைப்பட விமர்சனம்

நாயகன் வீரா, அவருடைய நண்பர்கள் அஜய்பிரசாத், சிவா ஆகிய மூவரும் சின்னச்சின்னத் திருட்டுகளைச் செய்துகொண்டு யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற படங்களில் நிச்சயமாக இடம்பெறும், பெரிசா ஒண்ண செஞ்சுட்டு செட்டிலாயிடணும் என்கிற வசனம் தவறாமல் இருக்கிறது. அப்படிப் பெரிசா செய்யப்போகிற நேரத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம். பெரிசா செய்யும் அந்தச்செயல் திருடுபவர்களின் வசதிக்காக என்றில்லாமல் நல்லசெயலுக்காக என்கிற இடத்தில் அண்மைக்காலப்படங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறது இந்தப்படம்.
நாயகன் வீரா, பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். அவருடைய நடிப்பில் கமலின் சாயல் தெரிகிறது. நாயகி ரெஜினாவை முதன்முறை சந்திக்கிற இடத்தில் பக்காவான அப்பாவிபோலக் காட்சி, ரெஜினாவுடனான காதல் காட்சி, என்னையே இழுத்துவிடறாங்களா நான் யாருன்னு காட்டுறேன் என்று பொங்கும் காட்சி என வகைவகையாய் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வேடம் அமைந்திருக்கிறது.
நண்பர்களாக நடித்திருக்கும் அஜய்பிரசாத், சிவா ஆகிய இருவரும் படத்துக்குப் பலம். குறிப்பாக குள்ளன் வேடத்தில் நடித்திருக்கும் சிவாவின் கேலி, கிண்டல் பேச்சுகளில் அரங்கம் சிரிப்பலைகளால் நிரம்புகிறது.
நாயகி ரெஜினா, அழகாக இருக்கிறார். நடிக்க வாய்ப்புள்ள வேடம். நெஞ்சுநிறையத் துயரத்தை வைத்துக்கொண்டும் அதை முகத்துக்குக் கொண்டுவராமல் சொற்களில் அதை வெளிப்படுத்த வேண்டிய சவாலான வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். இந்தப்பொழப்புக்கு யாரிடமாவது போய்ப்படுக்கலாம் என்று வீரா திட்டுகிற இடத்தில் ரெஜினா காட்டும் கோபம் எதார்த்தமாக இருக்கிறது. நன்றாகச் செய்திருக்கிறார்.
ஆடுகளம் நரேன், இளவரசு ஆகியோரின் வேடங்களும் நன்றாக இருக்கின்றன. தயாரிப்பாளர் பட்டியல்சேகர் இந்தப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். முதன்முறை நடிப்பது போலில்லாமல் நன்றாக நடித்திருக்கிறார்.
ஜிவி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன. சந்தீப்சௌதாலா பின்னணிஇசை அமைத்திருக்கிறது. திரைக்கதைக்குப் பொருத்தமாக பின்னணிஇசை இருக்கிறது. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
எல்லா உண்மைகளையும் சொல்லணும்னு அவசியமில்ல அதேசமயம் சொல்றதெல்லாம் உண்மையா இருந்தாப் போதும் என்பது உட்பட நறுக்குத் தெறித்தாற்போன்ற பல வசனங்கள் படத்தில் இருக்கின்றன.
இயக்குநர் அமித் துக்கு இது முதல்படம். நேர்த்தியான திரைக்கதை மூலம் சொல்ல வந்த செய்தியைச் சரியாகச் சொல்லியிருக்கிறார். திருடுவதற்குப் பல புதிய உத்திகளை இந்தப்படத்தில் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதை முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார். நட்சத்திரவிடுதியில் தங்ககட்டிகளைத் திருடும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. கடைசிக்காட்சியில் அதைத் திரும்பக்கொண்டுவந்திருப்பது நன்றாக இருக்கிறது.
வீரா, ரெஜினா ஆகியோருக்கிடையேயான காதல் காட்சிகளும் கலந்திருப்பதால் படத்தின் முதல்பாதி சுவாரசியமாகச் செல்கிறது. இரண்டாம்பாதி முழுக்க, நாயகனின் பெரிசா செய்யணும்கிற திட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு பரபரவென ஓடவைக்க முயன்றிருக்கிறார்.
ஆனால், அவ்வளவு பெரியநகைக்கடையைக் கொள்ளையடிக்கும் திட்டத்தை முதலாளிக்குத் தெரிந்தே (அதற்கு ஒரு காரணம் சொல்லியிருந்தாலும்) செய்கிறார்கள் என்பது நம்புகிறமாதிரி இல்லை. அதைவிட இந்த விசயத்தில் காவல்துறையையும் சம்பந்தப்படுத்தியிருப்பது பொருத்தமாக இல்லை.
சூதுகவ்வும் பாணியிலான படம், அதைப்போலவே சுவாரசியமாகவும் சொல்லியிருக்கிறார்கள் என்பதால் கவனிக்கத்தக்க படமாக இருக்கிறது.

Leave a Response