ஐவராட்டம் – திரைப்பட விமர்சனம்

சிவகங்கைப்பகுதிகளில் ஐந்துபேர் மட்டுமே விளையாடும் கால்பந்துவிளையாட்டை மையமாகக்கொண்டு அந்த மக்களின் குணநலன்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மிதுன்மாணிக்கம். குணநலன்கள் என்றால்? சாதிப்பெருமை பேசிக்கொண்டு மாந்தநேயத்தை மரணிக்கச் செய்வதுதான்.
நிரஞ்சன், துஷ்யந்த் ஆகிய இருவரும் தயாரிப்பாளரும் நடிகருமான ஜெயப்பிரகாஷின் மகன்கள். இந்தப்படத்தில் இருவரோடு ஜெயப்பிரகாஷூம் முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார். ஆண்டியப்பன்சேர்வை என்கிற வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.
கால்பந்தாட்டமைதானத்தில் தன்னை எதிர்த்துவிட்டார் என்பதற்காக ஒருவரின் கால்நரம்பைத் துண்டித்துவிடச் சொல்லும் கொடுமைக்காரர் ஜெயப்பிரகாஷ். வேறுசாதிப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதற்காக தன் தம்பியை வீட்டைவிட்டு ஒதுக்கிவைத்திருக்கிறார். அந்தத்தம்பி கால்பந்தாட்டவீரர் மட்டுமின்றி கால்பந்தாட்டப்பயிற்சியாளரும் கூட.
ஜெயப்பிரகாஷின் பெருமைகளில் ஒன்றான கால்பந்து அணியை எதிர்த்துவிளையாடும் அணிக்கு தம்பி பயிற்சியளிக்கிறார். அதன்முடிவு என்ன என்பதுதான் படம்.
அண்ணன் நிரஞ்சன்தான் கதாநாயகன், அவருக்கு ஜோடியாக நாயகி நித்யாஷெட்டி இருக்கிறார். பாடல் இருக்கிறது. ஆனாலும் படத்தில் தம்பி துஷ்யந்துக்குத்தான் நடிக்க அதிகவாய்ப்பு. அவரும் நன்றாக நடித்திருக்கிறார். இளங்குழுவைச் சேர்ந்த அவர் துடிப்புடன் இருக்கிறார்.
ஜெயப்பிரகாஷின் கூடவே இருக்கிற தம்பியாக நடித்திருக்கும் செந்தில்குமார், வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.
கால்பந்துவிளையாட்டுதான் படத்தின் மையம் என்பதற்காக படம் முழுக்க ஆடிக்கொண்டிருக்கவில்லை ஆனாலும் படம் முழுக்க கால்பந்துமைதானத்திலேயே நடக்கிறது. கடைசிநேரத்தில் நடக்கும் கால்பந்துபோட்டியை விறுவிறுப்பாகக் காட்டியிருக்கிறார்கள்.
சாதிப்பெருமை பேசுகிறவர் கடைசியில் திருந்துகிறார் என்கிற கருத்தைச் சொல்வதற்காகப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக்கருத்தை அந்தமக்களின் வாழ்க்கை முறையோடு கலந்து சொல்லமுயன்றிருக்கிறார். திரைமொழியில் அது முழுமையடையவில்லை.

Leave a Response