திருமணத்தில் மணமக்களை வாழ்த்திவிட்டுத் திரும்பும் விருந்தினர்களுக்கு ‘ தாம்பூலம் ’ வழங்கும் பழக்கம் ஓரளவு வசதியுள்ள குடும்பத் திருமணங்களில் இன்றளவும் நிலவி வருகிறது. இன்னும் சில சமீபத்திய திருமணங்களில் வெளியில் வரும் விருந்தினர்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு புத்தகத்தை வழங்குகின்றனர். அவை பெரும்பாலும் ஆன்மீகம், இல்லறம் தொடர்பான நூல்களே அளிக்கப்படுகின்றன. அரிதாகவே அனைவருக்கும் ஏற்புடைய நூல்கள் வழங்கப்படுகின்றன. அது பாராட்டுக்குரிய பழக்கமாகும்.
06.09.2017 ஆம் தேதி கோவை கொடீசியா அரங்கில் நடைபெற்ற தி சென்னை சில்க்ஸ் – ஸ்ரீ குமரன் தங்கமாளிகை உரிமையாளர்களாகத் திகழும் சகோதரர்களில் ஒருவரான திரு கே. விநாயகம் – மீனாட்சி தம்பதியின் மகன் வி. விக்ரம்நாராயண் – எம். அகஷ்யா திருமண விழாவில் ஏராளமான புத்தகங்கள் அழகழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வந்திருந்த விருந்தினர்கள் யார் வேண்டுமானாலும் அங்குள்ள தங்களுக்கு விருப்பமான எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
திருமண வீட்டில் குவிக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் நடுவில் விருந்தினர்கள் வரிசையாகச் சென்று ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துச் சென்ற காட்சி நெகிழ்ச்சியூட்டியது.
அதிக விலையுள்ள புத்தகங்களும் இருந்தன. அரிய புத்தகங்களும் தென்பட்டன. மிகவும் பயனுள்ள, ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
அன்பளிப்பாகத்தானே வழங்குகிறோம் என்று அசட்டையாக அல்லாமல் தரமான பொருட்களைத்தான் பரிசளிக்க வேண்டும் என்ற அவர்களின் நோக்கம் வெளிப்பட்டது.
புத்தகத்தைத் தேர்வு செய்தபின்னர் அதன் தலைப்பையும் விலையையும் மட்டும் பதிவு செய்து கொண்டனர். எடுத்தவர் பெயர் கேட்கப்படவில்லை. புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளருக்கு தொகை செலுத்தவே இந்த ஏற்பாடு என்று தெரிவிக்கப்பட்டது.
வாய்ப்புள்ளவர்களெல்லாம் வாய்ப்புக்கிடைக்கிற போதெல்லாம் புத்தகங்களைப் பரிசாக வழங்கி மகிழலாம். புத்தகங்கள் எப்போதும் எவருக்கும் நீங்காத நினைவுப் பரிசுகளாக விளங்கும் தனித்தன்மை வாய்ந்தவை.