தைரியம் தெம்பு இருந்தால் பதில் சொல்லுங்கள் – பாஜகவுக்கு மு.க.ஸ்டாலினின் 5 கேள்விகள்

உரியதகுதி இருந்தும் நீட் தேர்வால் மருத்துவப்படிப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதாவின் உயிரிழப்புக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நேற்று (செப்டம்பர் 8-2017) திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.

அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள குறிப்பில்,,,

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்குக் காரணமான மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்தும் நீட் தேர்விற்கு நிரந்தர விலக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இன்று திருச்சியில் தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

நீட் தேர்வை எதிர்த்து போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தகவல்கள் தடைகளாக வந்தாலும் அதையெல்லாம் உடைத்தெறியக்கூடிய வகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டது உள்ளபடியே மகிழ்ச்சியாக அமைந்தது.

‪மூன்று நாட்களுக்கு முன்னர் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், மாணவி அனிதாவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மருத்துவராகிவிடுவோம் என்ற கனவோடு இருந்த அனிதாவின் உயிரைப் பறித்தவர்கள் யார்? அனிதாவுக்கு உரிய கல்வியை இந்த அரசு மறுத்ததன் விளைவாக அவர் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த நாடு நன்றாக உணர்ந்திருக்கிறது.

‪பன்னிரெண்டு ஆண்டுகள் படித்து 1176 மதிப்பெண் வாங்கிய மாணவியின் திறமையை மூன்று மணிநேர நீட் தேர்வு நடத்தி எதிர்காலத்தை பாழாக்கியிருக்கிறார்கள். அனிதாவின் எதிர்காலம் மட்டுமல்ல, இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் இன்றைக்குக் கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது.

2017 நீட் தேர்வினுடைய முடிவை அகில இந்திய அளவில் எடுத்து பார்த்தால், முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் 18 பேர் வடமாநில மாணவர்கள். அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களில் 18 பேர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், வெறும் 7 பேர் தென்மாநிலப் பகுதியை சேர்ந்தவர்கள். இதில் வெட்கக்கேடு என்னவென்றால், அதில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கிடையாது.

காரணம்? நீட் கேள்விகள், சிபிஎஸ்இ-யின் மத்திய பாடத்திட்டத்தின்கீழ் கேட்கப்பட்டதுதான் காரணம்.‬

‪மத்தியப் பாடத்திட்டத்தில் கேள்வி கேட்டுவிட்டு, கல்வி மோசம் மோசம் என்று பாரதீய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் இன்றைக்கு புலம்பிக் கொண்டு, தவறான ஒரு பொய்ப் பிரசாரத்தை திட்டமிட்டு நாட்டில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு வேடிக்கை, நாளை இதே திருச்சியில் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்க பாஜக சார்பில் கூட்டம் நடைபெறவிருக்கிறதாம். நான் கேட்கின்ற கேள்விகளுக்கு அவர்களுக்கு தைரியம், தெம்பு இருந்தால் பதில் சொல்லட்டும்.

‪முதல் கேள்வி, தமிழகத்தின் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை எல்லாம் பாதிக்கும் நீட் தேர்வு பிரச்னை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்ட அந்த இரண்டு மசோதாக்கள் என்னவாயிற்று? டேபிளுக்கு அடியில் பூட்டி வைத்தீர்களா?‬

‪இரண்டாவது, ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கடைசிவரை சொல்லி, நம்பவைத்து, கழுத்தை அறுத்தீர்களே, அந்த ஓராண்டு விலக்கு இப்போது என்னாயிற்று? அவசரச் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்று சொல்லிவிட்டு, பிறகு பல்டி அடித்தீர்களே, ஏன்? ‬

‪இறைச்சிக்காக மாடுகளை விற்பதைத் தடுக்க அவசர அவசரமாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினீர்களே, இந்த நீட் தேர்வுக்காக ஒரு அவசரச் சட்டத்தினை இயற்றும் யோக்கியதை, தெம்பு, திராணி இல்லையா?

மீனவர்களைப் பாதுகாப்போம் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தீர்களே, மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகும் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா?

இன்றைக்கு டெல்லியில் விவசாயிகள் நாள் கணக்கில், மாதக்கணக்கில் பல கோணங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்களே இதுவரையில், பிரதமர் மோடி அவர்களை அழைத்து, சந்தித்ததுண்டா?

இதற்கெல்லாம் நாளை நடைபெறவுள்ள பிஜேபியின் கூட்டத்தில் மனசாட்சியின் மீது கைவைத்துப் பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால், நாங்களல்ல தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் என்றேன்.‬

‪இப்போது தற்காலிகமாக இரண்டாவது கட்டப் போராட்டமாக வரும் 13 ஆம் தேதியன்று அனைத்துக் கட்சிகளின் சார்பில், தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு செய்திருக்கிறோம். அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புகளின் விவரங்கள் கிடைத்த பிறகு, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி அதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும்.‬

அதேநேரத்தில், இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று சொன்னால், தமிழ்நாட்டில் நடக்கும் இந்த ‘குதிரை பேர’ ஆட்சியை ஒழித்து விட்டால், நிச்சயம் இதற்கான முடிவு வந்துவிடும். அதற்கான பணிகள் முழுமையாக நடந்து கொண்டிருக்கிறது.

திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பு ஆளுநரை சந்திக்க இருக்கிறோம், அப்படிச் சந்திக்கின்றபோது, அவர்களிடத்தில், இந்தப் பிரச்னைக்காக உங்களை சந்திக்கக் கடைசியாக வருவது இதுதான், இனி இதுகுறித்து உங்களைச் சந்திக்க நாங்கள் வரமாட்டோம். எனவே, உரிய நடவடிக்கை எடுங்கள், இல்லையென்றால், தமிழக மக்களை நாங்கள் ஒன்று திரட்டுவோம், அது மிகப்பெரிய ஒரு போராட்டமாக இருக்கும், இந்த ஆட்சி கவிழும் வரையில் அந்தப் போராட்டம் தொடரும், என்று தெளிவாகச் சொல்லப்போகிறோம் என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துக் கொண்டு பொதுக்கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திட்ட மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு அவர்களுக்கும் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response