அனிதா அநியாய மரணம் – எங்கும் போராட்டம், மோடி உருவபொம்மை எரிப்பு

நீட் தேர்வு காரணமாக நன்றாகப் படித்திருந்தும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத சோகத்தில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தமிழக மக்களை உலுக்கிவிட்டது.

அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட்டை நிரந்தரமாக விலக்கவேண்டும் என்று கோரியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த புதுச்சேரியும் போராட்டக் களமாகக் காட்சியளிக்கிறது.

புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெங்கட்டசுப்பா ரெட்டியார் சிலை சிக்னல் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டனக் முழக்கங்கள் எழுப்பிய அவர்கள் ‘நீட்’ தகுதித் தேர்வையும் உடனே இரத்து செய்ய வேண்டும் என்று முழங்கினர். சுமார் 200-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அங்கு பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து அவர்களைக் கைது செய்தது காவல்துறை.

புதுச்சேரி மாநில திராவிட விடுதலைக் கழகத்தினர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் அமர்ந்தனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒதியஞ்சாலை காவல்துறையினர் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட திராவிட விடுதலைக் கழகத்தினரை கைது செய்தனர்.

புதுச்சேரி ராஜா திரையரங்கம் சிக்னலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பதறிய காவல்துறையினர், 100-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.

Leave a Response