திரைப்படத்தில் அண்ணனானேன் – சாந்தன் படநாயகன் மாதேஸ்வரன்

எம்.கே. சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.மாதேஸ்வரன் தயாரிக்கும் திரைப்படம் ‘சாந்தன்’. இந்த படத்தில் சிற்பி மாதேஸ் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். காஷிஹா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சுகுமார், மது, பெஞ்சமின், போண்டா மணி, சாரதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். சாம்ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி இருக்கிறார்.

படம் பற்றி நாயகன் மாதேஸ்வரன் சொல்லும்போது, இந்தப்படத்தில் நான் கதாநாயகன் என்று சொல்வதைவிட கதைதான் கதாநாயகன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். நான் கிராமத்தில் இருந்து வருகிறவன். சகோதரர்களின் பாசம் புரிந்தவன் என்பதால் இந்த வேடத்தில் நடிக்க எளிதாக இருந்தது. எங்கள் வீட்டில் எனக்கு இரண்டு அண்ணன்கள் நான் கடைக்குட்டி, இந்தப்படத்தில் எனக்கு அண்ணன் வேடம். தம்பிக்காக நான் எப்படி மாறுகிறேன் என்பது கதை. படம் சிறப்பாக வந்திருக்கிறது என்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் சாம்ராஜ் கூறுகையில், “சகோதரத்துவத்தை கருவாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் இது. அண்ணன் – தம்பி பாசத்தின் ஆழத்தை எடுத்துரைக்கும் படமாக இது அமைந்துள்ளது. இயற்கையின் எழிலமைப்பில் இதயத்தை ஈரமாக்கும் ஓர் அமைதியான திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது.

“பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களையும், திருப்புமுனைகளையும் அற்புதமான கிராமத்து நகைச்சுவை கலந்து கதையாக சொல்லியிருக்கிறோம்.

“இத்திரைப்படத்துக்கு கனடாவில் வாழும் தமிழ் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ரவிபிரியன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு 6 பாடல்களை பதிவு செய்திருக்கும் ரவிபிரியன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னிகிருஷ்ணனை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார். மேலும், ரவிபிரியனின் பால்ய சினேகிதரான கானா பாலாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

“படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது” என்றார் இயக்குனர் சாம்ராஜ்.

 

Leave a Response