ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நானும் ஒரு விவசாயி என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு, திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் – நல்லநிலம் என்ற ஊரில் நடைபெற்றது. இதில் சத்யபாமா யூனிவெர்சிட்டி, ஜேபிஆர் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பொதுமக்கள் என்று மொத்தம் 2683 பேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு, ஒவ்வொருவரும் தலா இரண்டு நாற்றுகள் வீதம் நட்டனர்.
விவசாயி அல்லாதவர்களையும் நானும் ஒரு விவசாயி என்று பெருமிதத்தோடு சொல்லவைத்து, அவர்களை வைத்து பாரம்பரிய விதைகள் அல்லது மரக்கன்றுகளை நட வைக்கும் நிகழ்ச்சியில் , 2017 பேர் கூடி நடத்திக்காட்டிய சீனாவின் சாதனையை , 2683 பேரைக் கூட்டி , தனது மாறுவோம் மாற்றுவோம் அமைப்பின் மூலம் நடத்திக் காட்டி முறியடித்திருக்கிறார் நடிகர் ஆரி.
இந்த நிகழ்ச்சி குறித்துப் பேசிய ஆரி,” நானும் ஒரு விவசாயி நிகழ்ச்சி, வெறும் கின்னஸ் சாதனைக்காக நிகழ்த்தப்படவில்லை. இன்றைய தலைமுறையினரிடத்தில், நாம் எந்த துறையில் கோலோச்சினாலும் அடிப்படையில் ஒரு விவசாயியே என்கிற எண்ணைத்தை விதைப்பதற்கும் – அழிந்து வரும் நமது பாரம்பரிய விதைகள், மரங்கள் ஆகியவற்றின் மகத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குமே நடத்தப்பட்டது” என்றார்.
இந்த நிகழ்ச்சியை ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையுடன் இணைந்து சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும்.டிரான்ஸ் இந்தியா நிறுவனம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.