தொப்பி – திரைப்பட விமர்சனம்

திருட்டைத் தொழிலாகச் செய்வதால் குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தப்பட்ட பழங்குடிமக்கள் சமுகத்தில் பிறந்த ஓரிளைஞன் காவல்துறையில் சேரவேண்டும் என்று விரும்புகிறார். அதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.

குற்றப்பரம்பரையில் பிறந்திருந்தாலும் காவல்துறையில் சேரவேண்டும் என்பதற்காகக் காவல்துறைக்குத் துப்புக்கொடுப்பவராக இருக்கிறார் நாயகன் முரளிராம். அதனால் அந்தமக்கள் கூட்டத்தால் இனத்துரோகி என்று குற்றம்சாட்டப்படுகிறார். தம்முடைய சொந்தங்களாலேயே வெறுக்கப்படுபவராக மாறியபின்பும் அவருடைய காவல்துறையில் சேரும் ஆசைக்குப் பல தடைகள். முடிவு என்ன?

பழங்குடிமக்கள் தலைவராக சுருட்டுசாமி என்கிற வேடத்தில் நடித்திருக்கும் ஜிஎம்.குமார், அந்த வேடத்திற்கென்ற பிறந்தவர் போலப் பொருத்தமாக இருக்கிறார். சாமியாடி மக்களுக்கு அருள்வாக்குச் சொல்வதும் இரவில் திருடப்போவதும் தன்னுடைய மருமகனாலேயே அவமானப்படுத்தப்படும்போது பொங்குவதும் இப்படி எல்லாஇடங்களிலும் நன்றாக நடித்திருக்கிறார். அவரையே படத்தின் நாயகன் என்று சொன்னாலும் தவறில்லை.

புதுமுகநடிகர் முரளிராம் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேடத்துக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று உழைத்திருக்கிறார். ஆனால் அவருடைய உடல்மொழி அவருடைய வேடத்துக்குப் பொருத்தமாக இல்லை. நாயகியாக நடித்திருக்கும் ரக்ஷாராஜ் நல்லவரவு. அப்பாவுக்கும் காதலனுக்கும் இடையே மாட்டிக்கொண்டு தடுமாறும் காட்சிகளில் தேர்ச்சிபெறுகிறார்.

காவல்நிலையத்திலேயே பெரும்பாலான நிகழ்வுகள் நடக்கின்றன. மலைப்பகுதியில் பணியாற்றும் காவலர்களின் மனநிலைகள் பல நுட்பமான காட்சிகள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றன. துப்புச்சொல்கிறவனுக்கு இருக்கிற மரியாதை நமக்கு இல்லையே என்று காவல்ஆய்வாளராக நடித்திருக்கும் அருள்தாஸ் மனதுக்குள் புழுங்குவதும் அதன்காரணமாக அவர் செய்யும் செயல்களும் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. அருள்தாஸ் நன்றாக நடித்திருக்கிறார். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் காவல்துறையின் விரும்பத்தகாத செயல்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

இன்னொரு காவல்அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். எவ்வளவு கருத்துவேறுபாடுகள் இருப்பினும் பொதுமக்களிடம் தம் துறையினரை விட்டுக்கொடுக்காமல் செயல்படுவார்கள் என்பதை விளக்கும் வேடமாக அவருடைய வேடம் அமைந்திருக்கிறது.

பழங்குடிமக்கள் விரும்பினாலும் அவர்கள் வாழ்க்கையில் இருந்து விலகி வரமுடியாமல் இருப்பதற்கு ஒட்டுமொத்த சமுகமே காரணமாக இருக்கிறது என்பதைச் சொல்ல நினைத்திருக்கும் இயக்குநர் அதை காவல்ஆய்வாளரின் வேடத்தை வைத்துச் செயலாக்கியிருப்பதால் தனிப்பட்ட ஒருவரின் கோபத்தின் காரணமாகவே இப்படியெல்லாம் நடக்கிறது என்று புரிந்துகொள்கிற மாதிரி போய்விட்டது.

சாதிச்சான்றிதழ் வாங்கியதில் குழப்பம் ஏற்படும் காட்சிகளில் அந்த மக்களின் போராட்டங்களை உணரமுடிகிறது. மக்களுக்காகப் போராடும் பொதுவுடைமை இயக்கத்தவர்களுக்குப் பழங்குடிமக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். சிறையில் அவரைப் பார்த்தேன் என்று சொல்லி அவர்களுக்கு ஆதரவு தரும் காட்சிகளில் மனிதநேயம் மட்டுமின்றி நியாயத்தின் பக்கம் நிற்கிற அந்தமக்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மலைகள் மற்றும் வனப்பகுதிகள் என்றாலே ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு உற்சாகம் வந்துவிடும் போல. அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பழங்குடிமக்களின் வாழ்க்கை குறித்து நிறைய ஆய்வுகள் செய்து இந்தப்படத்துக்கான திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கும் யுரேகா பாராட்டுக்குரியவர். மக்கள்நலன் அடிப்படையில் அமைந்திருக்கும் அவருடைய வசனங்கள் வரவேற்கத்தக்கவை. எதர்த்தமாகப் போய்க்கொண்டிருந்த கதையை திடீரென பேய்க்கதையாக மாற்றாமல் இருந்திருக்கலாம்.

Leave a Response