ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருக்கும் அஜித்தின் `விவேகம்’ படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மகிழ்விக்கவிருக்கிறது. எப்படி?
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆகஸ்ட் 24 இல் வெளியாக இருக்கும் படம் `விவேகம்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.இப்படத்தில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
விவேகம் பட வெளியீட்டை அஜித் ரசிகர்கள் பல்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில்,24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்’ படத்தின் டீசரும் விவேகம் படத்துடன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.
ஆக, வருகிற 24-ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என்பதில் மாற்றமில்லை.