மரண விசாரணை செய்திக்குறிப்பிலேயே ஜெ எதனால் மாண்டார் என்று சொல்லிவிட்ட ஈபிஎஸ்

ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்திருக்கிறது.

டிடிவி.தினகரனை ஓரம்கட்டிவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைத்துக்கொண்டு முதல்வர் பதவியில் தொடர எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தார். அதற்காக ஓ.பன்னீர்செல்வம் அணியினரின், சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிட முடிவு செய்தார்.

அதற்காக, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

அது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 5.12.2016 அன்று தன் இன்னுயிரை நீத்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விசாரணை ஆணையம் அமையும் முன்பே சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் என்று முதல்வர் கோடிட்டுக் காட்டிவிட்டார் என்கிற விமர்சனங்கள் வரதொடங்கிவிட்டன. செய்கிற தப்பைக்கூடச் சரியாகச் செய்யத்தெரியவில்லையே என்கிற கிண்டல்களும் வர்த்தொடங்கியிருக்கின்றன.

Leave a Response