முரசொலி விழா மேடையில், திமுகவை பூண்டோடு அழித்துவிடத் துடிக்கும் நபர்கள்

முரசொலி கலைஞரின் ரத்தத்தோடும் சதையோடும் கலந்தது. பள்ளி மாணவராக இருந்தபோது அவரின் பிஞ்சு விரல்களால், ஆனால் அதேசமயம் எரிமலையின் சீற்றத்தோடு, கையெழுத்துப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது.

தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு அங்குல முன்னேற்றத்துக்கும் விழிப்பாய் இருந்து பாடுபட்டிருக்கிறது. எமெர்ஜென்சி காலத்தில் சர்வாதிகார பீரங்கிகளை எதிர்த்து நின்று போர்முரசு கொட்டியது முரசொலி. மத்தியில் அதிகாரக் குவிப்பை எதிர்த்து மாநிலங்களின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்ததும் இந்த முரசொலிதான், ஓடி வந்த இந்திப் பேயை விரட்டியடித்து தமிழ்த்தாயை சிம்மாசனத்தில் அமர வைத்ததும் இந்த முரசொலிதான், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் போர்ச்சங்கு ஊதி தூங்கிக்கிடந்த மக்களை விழித்தெழ செய்ததும் இந்த முரசொலிதான்! எல்லாவற்றுக்கும் மேலாக, தானே பிரசவ வலியைத் தாங்கி கலைஞர் பெற்றெடுத்த முதல் குழந்தை முரசொலி! இன்று அந்தக் குழந்தைக்கு வயது 75!

இதைக் கொண்டாடும் வகையில் முரசொலி அறக்கட்டளை ஒரு பாராட்டு விழாவை வரும் 10ஆம் தேதி ஏற்பாடு செய்திருக்கிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைத் துறைகளில் இருந்து பெரும்புள்ளிகள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முரசொலி என்றாலே பட்டென்று யாருக்கும் நினைவுக்கு வருபவை மூன்று!

1.கலைஞர், 2. திமுக 3. திராவிட இயக்கக் கொள்கைகள்

ஆனால், இவை மூன்றை எதிர்ப்பதையே தங்களின் தலையாயப் பணியாய் கருதும் பத்திரிகையாளர்கள் முரசொலி அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்! அதோடு, திராவிடர் இயக்கத் தத்துவங்களுக்கு நேரெதிராக தங்கள் தொழில்ரீதியாக கங்கணம்கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள் முரசொலியை என்ன சொல்லி வாழ்த்தப் போகிறார்கள்? உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாய் தானே பேசுவார்கள்!

திமுகவின் அழிவைப் பார்த்து பெருமகிழ்ச்சிக்கொள்ள ஆவலாய் துடித்துக்கொண்டிருக்கும் பத்திரிகை, மவுன்ட் ரோடு மகாவிஷ்ணு என்று எல்லோராலும் அறியப்படும் தி இந்து! பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் எல்லாம் தி இந்துவைப் பொருத்தவரைப் பிற்போக்குவாதிகள்! திராவிடர் இயக்கம் என்பது ஒரு பிற்போக்கு இயக்கம், மொழிவெறி இயக்கம், இடஒதுக்கீடு கேட்கும் இனவெறி இயக்கம், படிப்பறிவில்லாத முட்டாள்களின் இயக்கம், ரவுடிகளின் இயக்கம்! என்றென்றைக்கும் திராவிட இயக்க எதிர்ப்பில் ஊறி திளைக்கும் என்.ராம் பேசப் போகிறார்!

அடுத்து, கழகங்கள் இல்லா தமிழ்நாட்டைக் காண தவமிருக்கும் குருமூர்த்திக்கு தினமணியிலும் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் எழுத வாய்ப்பு தந்து அவருக்கு விளம்பர வெளிச்சம் கொடுத்த மார்வாடி மனோஜ்குமார் சந்தாலியா முரசொலி விழாவில் பேசுகிறார்! திராவிட இயக்கத்தின் மீது வெறுப்பினை உமிழும் ஆர்எஸ்எஸ் நச்சுப்பாம்பு குருமூர்த்தியைவிட கூடுதலாக கலைஞரின் மீதும் திமுகவின் மீதும் விஷத்தைக்கக்கும் நபர் மனோஜ்குமார் சந்தாலியா! இவரின் நாடி நரம்பு ரத்தம் மூளை என எல்லா உறுப்புகளிலும் தமிழர்விரோத சிந்தனை பெருக்கெடுத்து ஓடும். ஜெயலலிதா அரசிலும் இப்போது எடப்பாடி அரசிலும் விளம்பர எலும்புத்துண்டுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் மனிதர் இவர். தமிழர்களின் வரிப்பணம் எல்லாம் தமிழக அரசு மூலம் விளம்பர வருவாயாக மனோஜ்குமார் சந்தாலியாவின் கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருந்தாலும், மருந்துக்குக்கூட தமிழர்களின் நலன் மீது அக்கறைக் காட்டாதவர்! தமிழர்களின் நலனையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும் முரசொலியை இவர் மனதாரப் பாராட்டப் போகிறாரா?

டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகை ஆசிரியர் பகவான் சிங்கும் முரசொலி விழாவில் திருவாய் மலர இருக்கிறார்! திமுகவை அழிப்பதைப் பற்றியே கணந்தோறும் சிந்தித்து ஓய்வு உறக்கமின்றி விழிபிதுங்கிய துக்ளக் சோவின் தலைமைச் சீடரென்று தன்னை அறிவித்துக்கொள்வதில் புளங்காகிதம் அடைபவர் பகவான்சிங். ஈழ எதிர்ப்பாளராக இருப்பதையே தன் வாழ்வின் பெருமையாகக் கருதும் நபர். சோ உயிருடன் இருந்திருந்தால் முரசொலியை எப்படி உள்ளம்உருகிப் பாராட்டுவாரோ, அந்தக் கடமையை பகவான்சிங் செய்யட்டும் என்று முரசொலி அறக்கட்டளை கருதியிருக்கக்கூடும்!

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் தமிழகப் பிரிவை மலையாளிகளின் ஏகபோக சாம்ராஜ்யமாக மாற்றியதில் முக்கியப் பங்காற்றிய அருண்ராம் அவர்களும் முரசொலி விழாவில் வாழ்த்துரை கூறவிருக்கிறார். மார்வாடி, குஜராத்தி, மலையாளிகளின் ஆதிக்கத்தில் அழுத்தப்பட்டுக்கிடந்த தமிழர்களின் வாழ்வில் ஒளிக்கீற்றைப் பாய்ச்சியது திமுக! தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் தமிழர்கள் மேலோங்கி வளர வேண்டும் என்பது முரசொலியின் கொள்கை. ஆனால், டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் முழுவதும் மலையாளிகள் மட்டுமே குழாப்புட்டு சாப்பிட வேண்டும் என்பது அருண்ராமின் கொள்கை! தமிழர்களிடம் பத்திரிகை விற்று காசு சம்பாதிக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் தமிழகப்பிரிவுப் பணியாளர்கள் பெரும்பாலும் மலையாளிகள். அதன்காரணமாகத் தான், முல்லைப்பெரியாறு தொடங்கி தமிழகத்தின் உரிமை சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்திலும் கோணல்மாணலாக எழுதுகிறது டைம்ஸ் ஆப் இந்தியா! மலையாளிகள் எழுதுவது தான் தமிழர்களுக்கு பத்திரிகைச் செய்தி – உலகில் இந்த கேலிக்கூத்து வேறு எங்கு நடக்கும்? அந்த கேலிக்கூத்தை தமிழகத்தில் அரங்கேற்றிய அருண்ராம் முரசொலி விழாவில் ஆற்றும் உரையினைக் கேட்டு நாம் தமிழுணர்வுப் பெறுவோமாக!

முரசொலியின் ஒவ்வொரு சந்தாதாரரும் அதன் கொள்கைத் துடிப்புக்காக அதனை வாங்கிப் படிக்கிறானே தவிர, படிப்பதற்கு வேறு பத்திரிகையே இல்லை என்பதற்காக அல்ல! கடந்த 75 ஆண்டுகளாக முரசொலிக்கு தொடர்ந்து ஆதரவைத் தரும் சாதாரண திமுக தொண்டனை என்.ராம், மனோஜ்குமார் சந்தாலியா, பகவான்சிங், அருண்ராம் போன்ற திமுக விரோதிகளின் வாழ்த்துரைகளை கேட்க வைப்பதற்கு பெயர் தான் சத்தியச்சோதனை!

விழாவில், திக தலைவர் கி.வீரமணி பேசுகிறார். கலைஞர் மகிழ்வார்! தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தன் பேசுகிறார். திராவிட இயக்க வளர்ச்சியில் தினத்தந்தி நிறுவனருக்குப் பங்கு உண்டு! நக்கீரன் ஆசிரியர் கோபால் பேசுகிறார் – பொருத்தமான நபர்! கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துகிறார். கலைஞர் அவரின் தமிழ் ஆசான்!

ஆனால், திமுகவை தமிழக மண்ணைவிட்டே பூண்டோடு அழித்துவிடத் துடிக்கும், அதற்காக சிறப்பு முயற்சி எடுக்கும் நபர்கள் எல்லாம் முரசொலி விழா மேடையை அலங்கரிக்கப்போகிறார்கள்.

கலைஞர் உடல்நலத்தோடு இருந்தால் இதற்கு ஒப்புதல் தந்திருப்பாரா? என்ற கேள்விக்குக்கூட இருவேறுவிதமான பதில்கள் இருக்கக்கூடும். ஆனால், திமுக விரோதிகள் முரசொலி மேடையில் பேசப் போகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்குமே இருக்க முடியாது!

– வெற்றிகொண்டான்

Leave a Response