கதிராமங்கலம் மக்களோடு கடைசிவரை துணைநிற்போம் – சீமான் உறுதி

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த விளைநிலங்களைக் கையகப்படுத்தி, குழாய்களைப் பதித்து வருகின்றது. மத்திய அரசின் இத்திட்டத்தால் விவசாயம் அழிந்து விடும், நிலத்தடி நீர் மாசடைந்து அங்கு வாழ்வதே கேள்விக்குறியாகி விடும் என கூறி அக்கிராமத்தைச் சார்ந்த மக்கள் இரண்டாம் கட்டமாக, தொடர்ந்து 91 நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 11-07-2017 செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெடுவாசல் கிராமத்திற்கு சென்று அங்கு அறவழியில் போராடிவரும் மக்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்களிடம் பேசுகையில்,

‘மண்ணை மீட்கப் போராடும் மக்களோடு கடைசிவரை உறுதியாக நாம் தமிழர் கட்சி துணைநிற்போம், எந்த நிலையிலும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், கெயில், நியுட்ரினோ போன்ற நாசக்காரத் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம். சாகும்வரை மீத்தேன் திட்டத்தை எதிர்த்த நம்மாழ்வார் வழியில் கருத்துக்களை அனைத்துத் தரப்பு மக்களிடம் கொண்டுசேர்த்து மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுப்போம். விவசாய நிலங்களை மீட்போம்; விவசாயிகளைக் காப்போம்; வேளாண்மையை மீட்டெடுப்போம்’ என்று உறுதிகூறினார்.

முன்னதாக கதிராமங்கலம் கிராமத்தில் எடுக்கப்பட்ட நிலத்தடிநீரின் மாதிரியை ஆய்வுசெய்து ஆய்வறிக்கையை சீமான் வெளியிட்டார். நீதிமன்றத்தின் மூலம் ONGC நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படப்போகும் பேராபாயங்கள் குறித்து மக்களுக்கு விளக்கினார். பன்னாட்டு பெருமுதலாளிகளுக்குத் தரகுவேலை செய்வதாக மத்திய, மாநில அரசுகள் மீது குற்றஞ்சாட்டினார்.

Leave a Response