மதிமாறன் வரவேற்பில் ஒருங்கிணைந்த திராவிட அமைப்புகள் – அதிர்ச்சியில் பார்ப்பனர்கள்

அண்மையில் (20.6.2017) நியூஸ் 7 தொலைக்காட்சியில், யோகா குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திருப்பதி நாராயணன், மதிமாறன் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். விவாதத்தின்போது, பார்ப்பனர் என்று மதிமாறன் குறிப்பிட்டார் என்பதால்,நாராயணன் பூணூலையெல்லாம் காட்ட முயன்று ஆட்டம் போட்டார். அதனால் நெறியாளரால் கட்டுப்படுத்த முடியாத சூழலில், அரைமணி நேரத்தில் நிகழ்ச்சி முடித்துவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நடிகர் எஸ்.வி.சேகர், ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், `மதிமாறன் எங்கள் சாதியை இழிவுபடுத்திப் பேசியுள்ளார். சொந்த சாதியினரை உயர்த்திப் பிடியுங்கள். அதற்காக அடுத்த சாதியினரை இழிவுபடுத்தாதீர்கள்’ எனப் பேசியிருந்தார்.

இந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் வகையில், எஸ்.வி.சேகருக்கு சுப.வீரபாண்டியன் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், `விவாத நிகழ்ச்சியில் உங்கள் சாதியைப் பற்றி மதிமாறன் இழிவுபடுத்திப் பேசியது என்னவென விளக்க முடியுமா?’ எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்து எஸ்.வி.சேகர் கடிதம் எழுதியிருந்தார். அதில் பல அவதூறுகளும் மறைமுக மிரட்டலும் இடம் பெற்றிருந்தன.

அதன்பின் சுபவீ எழுதிய இன்னொரு கடிதத்தில் எஸ்.வி.சேகரின் தவறுகளைச் சுட்டியதோடு, திராவிட இயக்கத்தின் மீதான அவருடைய வன்மத்தையும் கவனப்படுத்தி எழுதியிருந்தார். அக்கடிதத்தின் கடைசியில், இந்த அவதூறுகள் குறித்தெல்லாம் நாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்கு வேலை இருக்கிறது நிரம்ப! அதில் கவனம் செலுத்துவோம். இருப்பினும், எஸ்.வி.சேகர் போன்றவர்களுக்குப் பின்னால் இருக்கிற வன்முறைக் கும்பல், மதிமாறன் போன்ற தோழர்களின் மீது ‘குறி’ வைக்கிறதோ என்ற ஐயம் மட்டும் என் நெஞ்சில் ஆழமாக இருக்கிறது. கவனம் தோழர்களே! என்று எழுதியிருந்தார்.

மதிமாறனுக்கு பார்ப்பன வன்முறைக்கும்பலினால் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயமும் அவரைப் பாதுகாக்கவேண்டும் என்கிற பொறுப்புணர்வும் தெரிந்தது.

ஜூன் 20 விவாத நிகழ்ச்சி முடிந்தவுடன் ஏற்கெனவே திட்டமிட்டபடி, மலேசியாவின் கோலாலம்பூரில் 24.06.2017 அன்று நடைப்பெற்ற ‘உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாட்டில் மதிமாறன் கலந்துகொண்டார். இன்று (ஜூலை6-2017) காலை சென்னை திரும்பினார்.

கோலாலம்பூர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை, திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியோர் திரளாகத் திரண்டு வரவேற்றனர்.

திராவிடர் கழகத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டிருந்த போதும், வே.மதிமாறனுக்கு பார்ப்பனர்களால் ஆபத்து நேரலாம் என்று தெரிந்ததும் அவருக்குப் பக்க பலமாக இருப்பதைக் காட்டவே அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சுபவீ ஒருங்கிணைப்பில் நடந்த இவ்வரவேற்பில் தமக்குள்ளான வேறுபாடுகளை மறந்து திராவிட அமைப்புகள் ஒன்றாகத் திரண்டதால் பார்ப்பனர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பர் என்பது நிச்சயம்.

– சிவா

Leave a Response