
காவிரி நதிநீர் உரிமை மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி புதுடில்லியில் போராட்டம் நடத்திய விவசாய சங்கத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்கத்தினருக்கு தஞ்சையில் 12.5.2017 அன்று மாலை திராவிடர்கழகம் சார்பில் நடைபெற்ற பாராட்டுவிழாப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க., வி.சி.க., காங்கிரசு உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்று உரையாற்றினர்.
அதில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு, விவசாய சங்க மாநிலத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு உரையாற்றியதாவது:
விவசாயம் அழிந்து வருகிறது. இதைப் பேசுவதற்கும், கேட்பதற்கும் உரிமையில்லை. 41 நாள்கள் மிகுந்த இன்னல்களுக்கிடையே போராட்டம் நடத்தினோம். குருத்துவாரிலே பிச்சை எடுத்தோம். ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எங்கள் சட்டையை, வேட்டியை கழற்றியது.
பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மோடி எங்களை பார்க்க அனுமதி வழங்கவில்லை. உலகம் இந்தியாவைப் பார்த்து, மோடியைப் பார்த்து சிரிக்கவேண்டும். விவசாயிகளின் நிலைமை உலகுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக நிர்வாணப் போராட்டம் நடத்தினோம்.
எங்களைப் பார்த்து தீவிரவாதிகள் என்கின்றனர். போராட்டம் நடத்தினால் தீவிரவாதிகளா? மாநில அரசிடம் போராடிப் பார்த்தோம், ஒன்றும் நடக்கவில்லை.
நதிகளை இணைப்பது, விவசாயப் பொருள்களை லாபகரமான விலைக்கு விற்பனை செய்ய அதிகாரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது இதையெல்லாம் செய்யவேண்டியது மத்திய அரசு தானே – அதனாலே டில்லியிலே போராட்டம் நடத்தினோம்.
அடுத்தகட்டப் போராட்டம் 18 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதிலே 28 மாநில விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். எங்கள் சந்ததிகளைக் காக்கும் போராட்டம் இது – மத்திய அரசு பாராமுகமாகவே இருந்தால், சிறுநீர் குடிக்கும் போராட்டமும், மலம் உண்ணும் போராட்டமும் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இப்பாராட்டு விழா பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
விவசாய சங்கத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு போராட்டமே வாழ்க்கை, வாழ்க்கையே போராட்டமாகக் கொண்டிருக்கிறார். போராட்டம் நடத்தும் பல்கலைக் கழகமாக விளங்குகிறார். 41 நாள்கள் பிறருக்குத் தீங்கு செய்யாமல், தங்களையே வருத்திக் கொண்டு போராடியிருக்கின்றனர். அரை நிர்வாண பக்கிரி என்றழைக்கப்பட்ட காந்தியார் அவர்களைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். கோட்சேவின் அரசியல் வடிவமான பா.ஜ.க.வினருக்கு மனிதநேயம் இருக்காது என்பதை அய்யாக்கண்ணு அவர்களின் போராட்டம் விளக்கியிருக்கிறது.
விவசாயம் பாவத் தொழில் என்கிறார்கள். 1919 ஆம் ஆண்டு வெளியிட்ட அசல் மனுதர்மத்திலே இப்படி கூறப்பட்டுள்ளது. ஆனால், உழவும் தொழிலும் திராவிடர் பண்பாடு. திருக்குறளும் இதையே காட்டுகிறது.
அவர்கள் நம் இனம் இல்லை. அதனாலே நமக்கு செய்ய மனம் இல்லை. காந்தியம், பெரியாரியம் தாண்டி இனமானம் காக்க டில்லியிலே நடத்தப்பட்டது இணையற்ற போராட்டம் ஆகும்.
விவசாயம் எப்படி அழிக்கப்பட்டதோ, விவசாயிகள் அவமதிக்கப்பட்டதுபோல, இன்றைக்கு விவசாயி வீட்டுப் பிள்ளைகள் ‘நீட்’ தேர்வு எனும் பெயராலே அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ‘நீட்’ தேர்வாலே விவசாயப் பிள்ளைகளின் மருத்துவக் கனவு தளர்ந்து போயுள்ளது. நெடுவாசலிலே போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களிலே மத்திய அரசுக்கு யார் சிறந்த அடிமையாக இருப்போம் என்பதில் போட்டி நடக்கிறது.
இறுதியாக, விவசாயிகள் போராட்டத்தை வென்றெடுக்க மக்கள் போராட்டமாக மாற்றவேண்டும். கட்சி, ஜாதி, மத பேதமின்றி மாநில உரிமையை, நாட்டை, ஜனநாயகத்தை, சமூகநீதியை காவியிடமிருந்து காக்கவேண்டும். சிவப்பு மண்ணாக, பச்சை மண்ணாக, புரட்சி மண்ணாக மாற்றவேண்டும் என்றார்.


