நீட் தேர்வு மட்டுமின்றி தமிழக உரிமைகளுக்காகவும் போராடும் மாணவர்கள் – தலைவர்கள் ஆதரவு

தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவை தகர்க்கும் நீட் நுழைவுத் தேர்வை உடனே நீக்கக் கோரி, அனைத்துக்கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 23 மாணவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (COTSO) ஆளுநர்மாளிகை முற்றுகைப் போராட்டம், உட்பட பல நிகழ்வுகளை முன்னெடுத்து, கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறது.

அந்தக் கூட்டமைப்பின் சார்பாக தமிழக அரசுக்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்….

1.வலுவாகவுள்ள தமிழ் நாடு பொதுச் சுகாதாரத்துறையை அழித்து எதிர்காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணி புரிய மருத்துவர்கள் கிடைக்கவிடாமல் செய்யும் “நீட்”தேர்விலிருந்து, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு இடங்கள் ஆகியவற்றுக்கு விலக்களிக்கவேண்டும்.

2.மாநில அரசு தற்போது கடைபிடித்து வரும் +2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை தொடர, தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றி அனுப்பிய இரண்டு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனடியாக மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்ற வேண்டும்.

3. கல்வித் துறையில் மத்திய அரசு தலையிடாமல் முழு அதிகாரத்தையும் மாநில அரசிடம் கொடுத்து மாநில சுயாட்சியை மத்திய அரசு பாதுகாக்க உறுதி செய்ய வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழக மாண்புமிகு முதல்வர் அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (COTSO) கேட்டுக்கொண்டிருக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (COTSO) முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி,விடுதலை ஆசிரியர் பூங்குன்றனார், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,நடிகர் சத்யராஜ்,டி.ராஜேந்தர்,இயக்குநர் வெற்றிமாறன்,பா.ரஞ்சித்,எஸ்.டி.பி.ஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு,சி.மகேந்திரன்,வீரபாண்டியன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வாசுகி,சமூக ஆர்வலர் ஓவியா,வழக்கறிஞர் அருள்மொழி,புதுமைப்பித்தன்,வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன்,பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங்,விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யா உள்ளிட்டோர் தங்களுடைய எதிர்ப்பு கையெழுத்துகளைப் பதிவிட்டுவுள்ளனர்.

நீட் தேர்வு மட்டுமின்றி தமிழக உரிமைகளுக்காகவும் போராடும் மாணவர் அமைப்புகள் நோக்கம் வெல்லட்டும்.

Leave a Response