எழுத்துலகில் பிரபஞ்சன் 55 என்கிற நிகழ்வு சென்னையில் ஏப்ரல் 29 அன்று முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது. அன்றைய மாலை நிகழ்வு பற்றிய கவிஞர் யாழினிமுனுசாமியின் பதிவு…..
பிரபஞ்சன் எனும் மானுடப் பேரன்பு…
…………………………………………………………..
”எனக்கு மறைவாய் குளிப்பதற்கு ஒரு இடம்கொடு கர்த்தாவே!”
…………………….
”எழுத்துலகில் பிரபஞ்சன் 55” ஒருநாள் நிகழ்வு, சென்னை இரசியன் பண்பாட்டு மையத்தில் (ரஷ்யன் கல்ச்சர் சென்ட்டர்) நடைபெற்றது.
தமிழ்ப்படைப்பாளர்களால் நடத்தப்பெற்ற இந்நிகழ்வு தமிழ்ச்சமூகத்தில் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த எழுச்சிமிகு போராட்டம் தந்த மனக்கிளர்ச்சிக்குச் சற்றும் குறைவில்லாத மனக்கிளர்ச்சியை எனக்குத் தந்தது.
நான் நேசிக்கும் படைப்பாளர்களில் என்றும் பிரபஞ்சன் அய்யா அவர்களுக்கு முதன்மை இடம் உண்டு. அவருக்கு இப்படியொரு விழா எடுத்துச் சிறப்பித்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
பிரபஞ்சனின் சிறுகதையை ”வலி” எனும் பெயரில் வம்சி எடுத்திருந்த குறும்படம் மிக அருமை. காவல்துறையின் கயமைத் தனத்தை அவ்வளவு வலியுடன் படைத்திருக்கிறார்.
விழாவில் பிரபஞ்சனின் முழுக் கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு 3 தொகுதிகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் நேர்மையின் அடையாளம் அய்யா தோழர் நல்லகண்ணு அவர்கள் வெளியிட்டுப் பேசினார்.
புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கி புதுவையிலும் இப்படியொரு விழா எடுக்கப்போவதாக உறுதியும் அளித்தார்.
வாழ்நாள் காணிக்கையாக பிரபஞ்சனின் எழுத்துக்கு வாசகர்கள் அளித்த பத்துலட்சம் பணத்தை பவாசெல்லதுரை மிகவும் அற்புதமான முறையில் ”நீங்கள் மனமுவந்து எடுத்துக்கொள்ளுங்கள்!” என்றுசொல்லி பணமுடிப்பை வழங்கச்செய்தார். அரங்கமே எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தது.
விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பிரபஞ்சனின் படைப்புலகம் குறித்து ஒரு பருந்துப்பார்வையில் அவருக்கே உரிய பாணியில் முத்தாய்ப்பாகப் பேசினார்.
நடிகர் சிவகுமார் அவருக்குரிய பாணியில் சடசடவெனப் பொழிந்து தள்ளினார் சங்கப்பாடல்களை. இந்த வயதிலும் அந்த மனிதனால் எப்படித்தான் அப்படி மனப்பாடம் செய்யமுடிகிறதோ என்று வியப்பாக இருக்கிறது.
இயக்குநர் ராஜ்முருகன் – மொழிபெயர்ப்பாளர் கே.எஸ். – முன்னாள் நீதிபதி சந்ரு உள்ளிட்டவர்கள் ரத்தினச் சுருக்கமான வாழ்த்தி அமர்ந்தனர்.
இயக்குநர் மிஷ்கின் உணர்ச்சிப்பெருக்குடன் பேசினார்…
அவர் பேச்சில் உணர்ச்சியின் உச்சம்தொட்ட இடம்…
”இந்த மனிதனை நான் காப்பேன். என் சொத்து அனைத்தையும் கொடுத்துக் காப்பேன். ஒருக்கால் நான் விபத்தில் இறந்துபோனால் …என் மகளே….இவரை நீ பார்த்துக்கொள். உன் கணவனுக்குக் கொடுக்க வேண்டிய வரதட்சனையை இவருக்குக் கொடுத்துவிடு” என்று பேசியதுதான்.
இந்நிகழ்வில் மிகவும் உருக்கமான பேச்சு எதுவென்றால் சு.தமிழ்ச்செல்வனுடையதுதான்…
பிரபஞ்சனின் ஒரு வரியைச் சொல்லி மட்டுமேகூட அவரை உன்னதப்படுத்த முடியும் எனக் காட்டியது தமிழ்ச்செல்வனின் பேச்சு. அவரது கதாப்பாத்திரம் ஒன்று..”எனக்கு மறைவாய் குளிப்பதற்கு ஒரு இடம்கொடு கர்த்தாவே!” என்று ஏசுவிடம் வேண்டிய வேண்டுதலில்தான் பிரபஞ்சன் என்னும் மகத்தான ஆளுமையை …எளிய மக்களை எழுத்தில் படைத்துக்காட்டிய அந்த அற்புத மனிதனை அடையாளம் கண்டுகொண்டதாக நெஞ்சுருகிப் பேசினார். அந்த வரிதான் அவரை அரசியல் களத்திற்கும் எழுத்துப்பணிக்கும் அழைத்து வந்ததாக நா தழுதழுத்துப் பேசியபோது என் கண்ணிலிருந்து கண்ணீர் சரசரவென வழியத்தொடங்கிவிட்டது. உங்களுடைய ஒவ்வொரு வரிக்கும் ஒரு லட்சம் தரலாம் சார் என்று நெகிழ்ந்து பேசினார் தமிழ்ச்செல்வன்.
ஏற்புரையில் பிரபஞ்சன் பேசும்போது அவருக்கே உரிய கலகலப்பு…
இந்தச் சமூகத்தின் மீது எந்தப் புகாருமற்று மானிதர்களை அவர் நேசிக்கும் விதம் குறித்துப் பேசிய போது வாழ்வின் அர்த்தம் புரந்தது. பிரபஞ்சன் என்னும் மானுடப் பேரன்பு புரிந்தது. அவருக்குப் பின்னால் இத்தனை அன்புள்ளங்கள் ஒன்றிணைந்திருப்பதின் மர்மம் புரிந்தது…
கடைசியாக அவர் இப்படி முடித்தார்…
”அன்பைக்காட்டிலும் நியாய உணர்வைப் பரப்ப ஏதாவது செய்யுங்கள்!”
இப்படியொரு அற்புதமான நிகழ்வை ஒருங்கிணைத்து வெற்றிகரமாகச் செய்து முடித்த தோழர்கள்…படைப்பாளர்கள்…
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.- எழுத்தாளர் தோழர் பவா செல்லதுரை – பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் – நடிகர் சிவகுமார் மற்றும் இந்நிகழ்விற்கு உதவிய அத்தனை பேரும் மிகவும் போற்றுதலுக்குரியவர்களே…
தமிழகத்தில் நடந்த இந்த நிகழ்வு அரிய நிகழ்வாகும். இது தொடரவேண்டும்.