ஐ – திரைப்பட விமர்சனம்.

வடசென்னையில் வசிக்கும் விக்ரமுக்கு கடும் உடற்பயிற்சி செய்து தமிழகத்தின் ஆணழகன் அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆணழகன் ஆகவேண்டும் என்பது கனவு. அதற்காகப் படத்தில் மட்டுமின்றி நிஜத்திலும் கடும் பயிற்சிகள் செய்து ஆணழகன்களுக்குச் சவால் விடுக்கிற மாதிரி உடலை வைத்திருக்கிறார். விளம்பரப்படங்களில் நடிக்கிற எமிஜாக்சனின் அதிதீவிர ரசிகராகவும் இருக்கிறார். எமி, பெண்களின் உள்ளாடை விளம்பரத்தில் நடித்தால் அந்த உள்ளாடையையும் வாங்கி வைத்துக்கொள்ளும் அளவுக்குத் தீவிர ரசிகர்.

எமிக்கு இந்தப்படத்தில் மிகநல்ல வாய்ப்பு. அழகாக இருக்கிறார். விளம்பரப்படங்களில் நடிக்கிறவர் என்பதால் வண்ணவண்ண உடைகள் அணிகிற வாய்ப்பு மட்டுமின்றி நீச்சல்உடையில் படுகவர்ச்சியாகவும் வருகிறார். அந்தஉடையில் அவரைப் பார்க்கும் விக்ரம் மயங்கி மயங்கி விழுகிறார்.

உண்மையிலும் நிறைய ரசிகர்கள் மயங்கும் வாய்ப்பு இருக்கிறது. உடன்நடிக்கிற நடிகர் படுக்கைக்கு அழைக்கும்போது அறுவெறுப்புக் கொள்வது, விக்ரம் மீது பொய்யான காதல் அதன்பின் உண்மையான காதல், கடைசியில் அறுவெறுப்பான விக்ரமை அடையாளம் கண்டபிறகும் அன்பு செலுத்துவது என எல்லா இடங்களிலும் வெற்றிமதிப்பெண் வாங்கிவிடுகிறார்.

இந்திய ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ளப் பணம் வேண்டும் என்பதற்காக சின்னச்சின்ன விளம்பரங்களில் நடிக்கிறார் விக்ரம். ஒருகட்டத்தில் எமியுடன் இணைந்து உயர்ரக விளம்பரப்படங்களில் நடிக்கிற வாய்ப்புக் கிடைக்கிறது. உடன் நடிக்கும் எமியுடன் காதலும் வருகிறது. விளம்பரப்படமெடுப்பதற்காக சீனா போய்ப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அந்தஇடங்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றன. கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள். சீனா மட்டுமின்றி சென்னை கொடைக்கானல் உட்பட எல்லாஇடங்களிலும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

எமி நடிக்கும் விளம்பரப்படங்கள் அவருக்கு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது. மிகவும் வண்ணமயமாக எடுத்துக்கொடுத்துவிட்டார். சீனாவை நகலெடுத்து கொடைக்கானலில் வளர்க்கும் பூந்தோட்டம் கதைக்குள்ளும் பொருந்தியிருப்பதால் மிகவும் வரவேற்புக்குரியதாக இருக்கிறது.

படத்தில் தமிழகஆணழகன் போட்டியில் தோற்ற உண்மையான இந்தியஆணழகன் பட்டம் வென்ற காமராஜ், நச்சுத்தன்மையுள்ள குளிர்பானத்தைத் தயாரிக்கும் நிறுவன விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று விக்ரம் சொல்வதால் அவர் மீது கோபம் கொள்ளும் ராம்குமார் (நடிகர் திலகம் சிவாஜியின் மூத்தமகன்) விக்ரம் விளம்பரநடிகராக வந்துவிட்டதால் அதுவரை உச்சத்திலிருந்து வாய்ப்பிழந்த உபேன்பட்டேல், ஒப்பனைன்கலைஞராக வந்து விக்ரம் மீது ஒருதலைக்காதல் கொள்ளும் அரவாணியாக நடித்திருக்கும் ஓஸ்மாஜாஸ்மின் ஆகிய நால்வரும் விக்ரமை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டுகிறார்கள்.

அவர்களோடு இணைந்துகொள்ளும் ஐந்தாவது நபர், ஐ எனும் கொடிய நோய்க்கிருமியை விக்ரம் உடலில் செலுத்திவிட்டால் அவர் அகோரமாகிவிடுவார் என்று திட்டம் தீட்டி அப்படியே செய்தும் விடுகிறார்கள். வில்லன்கள் எல்லோரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ராம்குமார் மிகப்பெரிய தொழிலதிபர் வேடத்துக்கு அட்சரசுத்தமாகப் பொருந்தியிருக்கிறார்.

அவரையும் அகோரமாக்கி சந்தானம் அடிக்கிற கிண்டல்களைப் பார்க்கும் போது ஒரு சிங்கத்தை இப்படிச் சாய்த்துவிட்டார்களே என்று எண்ணத்தோன்றுகிறது. அரவாணியாக நடிப்பவர் விக்ரம் மீது காதல்கொள்வது அரவாணிகளின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் விக்ரம் அவரைப் பார்த்து முகம்சுளிப்பது இந்தச் சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவும் அமைந்திருக்கிறது.

இந்த உண்மையைத் தெரிந்துகொண்டு விக்ரம் அவர்களைப் பழிவாங்குவதுதான் படம். ஒட்டுமொத்தப்படத்திலும் விக்ரமின் உழைப்பு பிரமிக்கவைக்கிறது. தொடக்கத்தில் உண்மையான ஆணழகனாகவே இருப்பதாகட்டும், நோய்க்கிருமி செலுத்தப்பட்ட பின் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதாகட்டும் ஒருபாடலில் வித்தியாசமான தோற்றம் காட்டுவதிலாகட்டும் மனிதர் மிரட்டியிருக்கிறார். அதுவும் ஆணழகனாக இருந்து அடுத்த சிலகாட்சிகள் உடல் இளைத்துப் பார்க்கவே பரிதாபமான தோற்றத்தைக் கொண்டு வந்ததது உலகத்தில் எந்த நடிகரும் இதுவரை செய்யாத முயற்சி என்றே சொல்லலாம்.

படத்தில் மூன்று சண்டைக்காட்சிகள். தொடக்கத்தில் கட்டுமஸ்தான உடல்கொண்டவர்கள் எல்லாம் போடுகிற சண்டை, சீனாவில் சீனாக்காரர்களோடு போடுகிற சண்டை-அங்கும் அரிவாள் கலாச்சாரம் இருக்கிறது. அதுவும் பார்க்க வித்தியாசமாக இருக்கிறது- கடைசியில் உடல்இளைத்து முதுகுவளைந்து அறுவெறுப்பான தோற்றத்தில் இருக்கும் போது தொடர்வண்டிமேல் போடுகிற சண்டை ஆகிய மூன்று சண்டைகளும் நன்றாக இருக்கின்றன. மிகவும் கனமாக அமைந்துவிடும் ஆபத்துள்ள இந்தப்படத்தை இலகுவாக்க சந்தானம் பெரும் உதவியாக இருக்கிறார். தொடக்கத்திலிருந்து கடைசிவரை அவர் வருகிற எல்லாக்காட்சிகளிலும் சிரிப்புவெடி வெடித்துக்கொண்டேயிருக்கிறது.

வில்லன்கள் கூட்டத்தில் ஐந்தாவதாக இணைந்துகொள்ளும் சுரேஷ்கோபியும் தன்பங்கை மிகச்சரியாகச் செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்துக்குப் பலம். மெர்சலாயிட்டேன் பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் சிறப்பு.

ஆண்டுமுழுதும் வரவேற்புப் பெறுவதோடு பல விருதுகளையும் வாங்கக்கூடிய பாடலாக வந்திருக்கிறது கபிலன் எழுதியிருக்கும் என்னோடு நீயிருந்தால்… பாடல். ஒவ்வொரு காட்சிக்கும் நிறைய மெனக்கெட்டிருப்பதால் ஒருநிமிடத்தில் முடிக்கும் வாய்ப்பிருந்தும் அப்படி முடிக்க மனமில்லாமல் அதற்கு மேலும் நீட்டித்திருக்கிறார்கள்.

அதோடு படம் முழுவதும் காட்சியழகும் நடிகர்களின் நடிப்பழகும் போட்டிபோட்டிக்கொண்டு முன்நின்றுவிடுவதால் காதல்காட்சிகள் மற்றும் பழிவாங்கும் காட்சிகளின் வீரியம் குறைந்து காணப்படுகிறது.

ஐந்துபேர்களுடைய தனித்தனியான சுயநலம் ஒரு அப்பாவியின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதைச் சொல்லியிருப்பதின் மூலம் இன்றைய சமுதாயத்தில் அப்பாவிகள் படும்பாட்டை சரியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

Leave a Response