
தஞ்சாவூரில் பிறந்தவர்.முல்லை நதி செழிக்கும் தேனி மாவட்டம் பழநி செட்டி பட்டியில் வளர்ந்தவர்.சில ஆண்டுகள் பகுதிநேர நூலகர் பணி.பல நூல்களை வாசித்த அனுபவத்தோடு, இதயம் பேசுகிறது,குங்குமம்,குமுதம் இதழ்களில் செய்தியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.தற்போது தின இதழில் செய்தியாளராக இருக்கும் தேனிகண்ணன் எழுதிய நூல் வசந்தகால நதிகளிலே.
அந்த நூல் குறித்து கவிஞர் பொள்ளாச்சி ராஜ்குமார் எழுதிய பகிர்வு…
குமுதம் வாசிப்பவர்களுக்கு நிச்சயம் பரிச்சயமாகி இருக்கும் பெயர் தேனி கண்ணன். நதியில் எதைத்தேடினாலும் அழகுதான். கூழாங்கல் உருட்டி உருட்டி ஓடும் நதியின் பிம்பத்தில் வசந்தம் தேடிய எழுத்தாளர் தான் தேனி அண்ணன். இவர் எழுதிய “வசந்தகால நதிகளிலே” தொகுப்பில் மூழ்கி எழுந்த ஈர அன்பில் இதை எழுதுகிறேன்.
இளையராஜா, முத்துலிங்கம், வாலி, மு.மேத்தா, அஜித்குமார், விவேக், வடிவேலு என்று நிறைந்த அன்பில் பிரபலங்கள் பட்டியலில் நட்பை கொண்டாடுபவர். கண்ணன் ராஜா சார் ஊர்ல இருக்கார சந்திக்க முடியுமா? என பல பிரபலங்கள் போன் பண்ணி கேட்பார்கள். அந்தளவு அடர்த்தியான அன்பை இளையராஜாவிடம் பெற்றவர். என்ன பங்காளி சும்மா இருந்தா அப்படியே ஆபிஸ் பக்கம் வாரது என வடிவேலு கூப்பிடும் அளவிற்கு எல்லோரிடமும் பழக்க வழக்கம் கொண்டவர் தேனி அண்ணன்.
தன் சந்தித்த பிரபலங்களை பற்றி இவர் எழுதிய தொகுப்பே “வசந்தகால நதிகளிலே”. தெரியாத விஷயங்களை எளிய நடையில் கனகாம்பர பூ போல நதியில் உலவ விட்டிருக்கிறார். பொதுவாக இளையராஜாவுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பெரிய சுவர் இருந்தது அதை மெல்ல மெல்ல தகர்த்த பெருமை அண்ணனையே சாரும். நான்கு வருடம் ஃபாலோபண்ணி குமுதத்தில் இளையராஜா கேள்வி பதில்களை தொகுத்தவர். ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு சிறப்பு மலர் தயாரித்த பெருமை என இவர் செய்த சாதனைகளை எழுதிக்கொண்டே போகலாம்.
மொத்தம் 29 கட்டுரைகள். முதல் பக்கத்திலிருந்து, கடைசி அட்டைவரை ஒவ்வொரு தகவலும் இனிப்பு குலோப்ஜாமுன் போல கடக்கும். சாதாரண வாசகனுக்கு சினிமா பிரபலங்களின் எதார்த்தத்தை கிராமத்து மனிதர்களை போல சாவகாசமாக கை குலுக்கி விடுகிறார் வாய்ப்புள்ளவர்கள் கட்டாயம் வாசித்து விடுங்கள்.
ஊர் உலகத்துக்கே சோறு போட்ட தஞ்சாவூரில் பிறந்தவர். தற்போது தினஇதழ் தினசரி பேப்பரில் சினிமா நிருபர். ஒவ்வொரு பாடலிலும் ஒரு விஷயத்தை தெரிந்து வைத்திருப்பார். இசையின் அடி ஆழம் தொட்ட மாயக்கண்ணன் இந்த தேனி அண்ணன்.


