கடலூரில் சீமானுக்கு ஆதரவாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பரப்புரை

கடலூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில தினங்களாக கடலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் கடலூர் முதுநகர் பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றபடி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தனக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். மீனவ கிராமங்களிலும் வீதி, வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.

கடலூர் அருகே கோண்டூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் நேற்று திறந்த ஜீப்பில் நின்றபடி சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, கண்ணதாசன், ஜெகதீஸ்பாண்டியன், ரவிமரியான் ஆகியோரும் வீதி, வீதியாக பிரசாரம் செய்து வாக்குசேகரித்தனர். பின்னர் இயக்குனர்கள் தனித்தனியாக கடலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சீமானுக்கு ஆதரவு திரட்டினர்.

முன்னதாக கடலூர் அருகே கோண்டூரில் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது. ஆகவே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அ.தி.மு.க., தி.மு.க. மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணநாயகத்தை ஒழிக்க மக்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும். வாக்களிக்கும் போது பணம் வாங்க மாட்டோம் என்று மக்கள் உறுதிமொழி எடுத்தால் தான் பணநாயகத்தை ஒழிக்க முடியும். இளைய தலைமுறையினர் வெளியில் வந்து வாக்களிக்கும் போது இந்த முடிவுடன் வாக்களித்தால் பணமே வெற்றியை நிர்ணயம் செய்யும் என்ற நிலை மாறும். ஜனநாயகம் மலரும்.

பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த இடத்தில் தான் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று குறிப்பிட்டு சொன்னாலும் கூட அதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Response