
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….
அமைச்சர் நிர்மல்குமார் தனது துறைகளின் மோசமான நிலையைக் கவனித்து,நடவடிக்கை எடுப்பதை விட்டு, அரசியல் அநாகரீகமாக,தரம் தாழ்ந்து பேசி வருகிறார்.குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியை பற்றி,நாலாந்தரமாகப் பேசி வருகிறார்.
தேனி,புழல் சிறைகளில் கைதிகள் ஓடி விட்டனர்.சிறைத்துறையைக் கையில் வைத்துள்ள அமைச்சர் என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என எடப்பாடி பழனிச்சாமி கேட்கிறார்.இப்படிக் கேட்பதில் தவறென்ன? நிர்மல்குமாரின் அனுபவம் என்ன? நீங்க எத்தனை கட்சிக்குப் போனீங்க? இன்னும் சொல்லப்போனால்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் எத்தனை தடவை காலில் விழுந்தீர்கள்? அவரைப் புகழ்ந்தீர்கள்? எடப்பாடியால்தான் இந்த நாட்டில் நல்லது செய்ய முடியும்னு சொன்னீங்க… நீங்க கொடுத்த பேட்டி என்கிட்ட இருக்கு.இன்றைக்கு பம்பர் பரிசு குலுக்கலில் உங்களுக்கு அமைச்சர் பதவி வந்துள்ளது.
தவெகவில் எத்தனை வருஷம் சேவை செய்துள்ளீர்கள்? அதிகாரம் வந்துவிட்டால் வானத்திற்கும்,பூமிக்கும் குதிப்பதா? கொஞ்சம் நாகரீகமாகப் பேசவேண்டும் பிரதர்.உங்களுக்கு 7 துறையை முதல்வர் கொடுத்திருக்கார். முதல்ல அந்தத் துறைகளில் என்ன இருக்குன்னு படிங்க.நீங்க இந்த ஆறு மாசத்தில் தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சீங்க? பட்டியலிட்டுச் சொல்ல முடியுமா?
இன்றைக்கு தமிழ்நாட்டில் பல முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்.ஜான் ஆரோக்கியசாமி,விஷ்ணு ரெட்டி,நிர்மல்குமார் இப்படி பல பேர் உள்ளனர்.ஆனால் முதலமைச்சர் மட்டும் ஆக்டிவா இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


