
தமிழீழ விடுதலைக்காக வாழ்நாளெல்லாம் போராடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (வயது 69) நவம்பர் 14,2026 சனிக்கிழமை நள்ளிரவு காலமானார்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்திருந்த அவர், அண்மைக்காலமாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சனிக்கிழமை இரவு 11.50 மணியளவில் தனது வல்வெட்டித்துறை இல்லத்தில் உயிரிழந்தார்.
தமிழீழத்தின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் களத்தில் நீண்டகால அனுபவம் கொண்ட எம்.கே.சிவாஜிலிங்கம், இராணுவம்,காவல்துறை மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கிய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு இலக்காகியும் எதற்கும் அஞ்சாது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் அரசியல் செயற்பாடுகளிலும் தீவிரமாகப் பங்காற்றியவர் ஆவார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய சிவாஜிலிங்கம், 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றினார்.தொடர்ந்து 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், தன் சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் பின்னர், ஏனைய உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் தனது பதவிகளை விட்டுக்கொடுத்த அவரது தன்னலமற்ற பண்பைச் சக அரசியல் தலைவர்களும் பாராட்டியிருந்தனர்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது கொள்கைகளில் தளராமல் வாழ்ந்த அவர், தமிழ் மக்களின் விடிவுக்காக அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதையே தனது இறுதி விருப்பமாக வலியுறுத்தி வந்தார்.
அவருக்கு உலகெங்கும் உள்ள தமிழீழ மக்கள் கண்ணீர் வணக்கம் செலுத்திவருகின்றனர்.


