
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் வீரபாண்டியன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது….
தவெகவின் 6 மாத ஆட்சி நம்பிக்கை தருவதாக இல்லை.விஜய்க்கு மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து நாங்கள் அவருக்கு ஆதரவு அளித்தோம்.ஆளுநர் மக்கள் அதிகாரத்தில் அமர்ந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஆதரவளித்தோம்.ஆனால்,13 கோடி பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.இத்தகைய ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் அல்லது கண்டிக்கிறேன் என்றாவது ஒரு வார்த்தையை முதல்வர் இதுவரை சொல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது.
திரைப்படத்தில் ஒரு வாக்குக்காக போராடிய விஜய்,13 கோடி பேரின் வாக்குகள் பறிக்கப்பட்டதை ஏன் கண்டிக்க மறுக்கிறார் என்கிற கேள்வி அவர் முன்னால் உள்ளது,அவர் வாய்த்திறக்க வேண்டும்.அமைச்சர்கள் பேசுவது என்பது வேறு,முதல்வர் பேசுவது என்பது வேறு.முதல்வர்தான் தமிழக அரசியல் அதிகாரத்தின் குறியீடு. அவருக்குத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
எனவே அநீதிக்கு எதிராக அவர் வாய்த்திறக்க முன்வர வேண்டும்.குறிப்பிட்ட தொகுதி இடங்களை மட்டுமே குறிவைப்பதற்கு மாறாக,எங்கெல்லாம் தொழிற்சாலைகள் இல்லையோ,சிறுதொழில் நசிந்திருக்கிறதோ,மின்சார வசதிகள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் முதல்வர் தனி கவனம் செலுத்தவேண்டும்.தமிழ்நாடே அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது.எனவே பாகுபாடுகள் காட்டக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருச்சி கிழக்கு உட்பட அனைத்துத் தொகுதிகளிலும் நிற்கிற கொள்கை பலம், தார்மீக பலம் உண்டு.இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கம்யூனிஸ்ட்கள் கூடி முடிவெடுப்போம்.எங்களுக்கு அரசியலில் பிரதான எதிரி ஆர்எஸ்எஸ்,பிஜேபி.அதை வீழ்த்துவதற்குதான் எங்கள் வியூகங்கள் இருக்கும்.அதிமுக, திமுக ஜனநாயக சக்திதான்,நேச சக்திதான்.எங்களுக்கு அவர்கள் மீது பகை இல்லை.நாம் தமிழர் போன்ற இயக்கங்கள் எல்லாம் ஜனநாயக சக்திகள்தான்.ஆர்எஸ்எஸ், பிஜேபியை வீழ்த்துவதற்கு அந்த கொள்கையை யார் உறுதியாக எதிர்க்கிறார்கள் என்பதைப் பார்த்து அந்தநேரத்தில் யாருடன் அணி சேர்வது என்பது குறித்து தலைமை முடிவு செய்யும்
இவ்வாறு அவர் கூறினார்.


