தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2028 இல்தான் – வெளிப்பட்ட தகவல்

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமித்த உத்தரவை எதிர்த்து செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில்,ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறித்த காலத்தில் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகளை முடித்து தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது,தமிழக அரசுத்தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி,

கடந்த ஜனவரி மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது.இதன்பிறகுதான் வார்டு மறுவரையறை செய்யப்படும்.அதன்பின்னர் பட்டியல் மறறும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டு பின்னர் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் முடிந்த பிறகு,வார்டு மறுவரையறை செய்ய 120 நாட்களும்,பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய 30 நாள்களும்,தேர்தலுக்கு முந்தைய நடவடிக்கைகளுக்கு 90 நாள்கள் என மொத்தம் 240 நாள்கள் தேவைப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு,கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது நடைபெறுகிறது.இந்தப் பணிகள் முடியும்வரை எதுவும் செய்யமுடியாது.எங்களது கைகள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி, உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் இதுபோன்ற பிரச்னைகள் வருவது ஏன்?. பதவிக்காலம் முடியப்போகிறது எனத் தெரிந்தும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.அதோடு,இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் தமிழக அரசும்,மாநில தேர்தல் ஆணையமும் பதில் தரவேண்டும்.தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பதில்மனுவில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2027 மார்ச் 1 ஆம் தேதி நிறைவடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதன்பின் தமிழக அரசு சொல்லும் 240 நாட்கள் சேர்த்தால் 2027 நவம்பர் மாதம் வரையிலும் இந்த வேலைகள் இருக்கும் என்று தெரிகிறது.இந்தப்பணிகள் சரியாக நடந்தால் 2027 டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கலாம் இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் டிசம்பரிலும் நடக்காது 2028 தொடக்கத்தில் நடக்கலாம் என்பதுதான் எதார்த்தம்.

Leave a Response