பாஜகவின் கனவுத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தும் விஜய் – பெ.ம கடும்கண்டனம்

விசய் அரசின் கொத்தடிமை ஊழியர் திட்டத்தை வீழ்த்த ஒன்று திரள்வீர் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (Overseas Manpower Corporation Ltd.) 1978 ஆம் ஆண்டு முதல் கிண்டியில் இயங்கி வருகிறது.இது செர்மனி,அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்குத் தேவைப்படும் மருத்துவப் பணியாளர்களைத் (செவிலியர்,ஃபிசியோதெரப்பி போன்ற பாராமெடிகல்ஸ் பணியாளர்களை) தேர்வு செய்து அனுப்பி வந்தது.இந்நிறுவனத்தை,தமிழ்நாடு அரசு கூடுதலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதன் தலைப்பைப் பார்த்ததும் வெளிநாடுகளில் தமிழர்களை வேலைக்கு அமர்த்தும் பொறுப்பை த.வெ.க.அரசு எடுத்துக் கொண்டுள்ளது போல் தோன்றும்.உள்ளே படித்தால்தான் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடத்திலிருந்து பல்கலைக்கழகம் வரையில் ஆசிரியர்களையும்,ஊழியர்களையும் அமர்த்துதல்,காவல்துறை,தீயணைப்புத்துறை, மருத்துவத் துறை,மருத்துவ ஊழியர்கள் முதலிய பல்வேறு பணிகளுக்கும் மேற்படி அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம்தான் பணி நியமனங்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என்பது தெரியவரும்.

சம்பளம் முறைப்படுத்தல்,ஓய்வூதியம் மற்றும் பணிமூப்புப் பயன்கள் பெறுதல்,சம்பள உயர்வு,அகவிலைப்படி உயர்வு போன்ற எந்த பணிப்பயன்களுக்கான வரைமுறைகளும்,பணி ஒழுங்குகளும் இல்லாத அத்துக்கூலிகளாக ஆயுள்வரை,ஒப்பந்த ஊழியர்களாக,தற்காலிக ஊழியர்களாக கட்டுப்படும் வகையில்,அரசுப்பணிகள் – அரசுத்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் மாற்றப்படும் என்று 28.12.2026 அன்று வெளியான தமிழ்நாடு அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பா.ச.க. ஆட்சியின் இந்தக் கனவுத்திட்டத்தை த.வெ.க. விசய் ஆட்சி செயல்படுத்த முன்வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடையும் மண்ணின் மக்கள் அனைவரும் ஒரு கணம் தங்களைத் தாங்களே தன் திறனாய்வு செய்து கொள்ளவேண்டும்.

தனியார் துறை தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் ஏற்கெனவே இருந்த தொழிற்சாலை சட்டமும், தொழிலாளர் சட்டமும் நடைமுறையில் காலாவதி ஆக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.எட்டு மணிநேர வேலை வரம்பு என்பது தொன்மை நினைவுச் சின்னமாகி,ஒரு ஷிப்ட்டுக்கு 12 மணி நேரம்,11 மணிநேரம் ஊழியர்களை வேலை வாங்குவது தொழிற்சாலைகளிலும் நிறுவனங்களிலும் பெரும்பாலும் செயலுக்கு வந்துவிட்டது.தற்சார்புள்ள தொழிற்சங்கம்,மையப்படுத்தப்பட்ட தொழிற்சங்க இணைப்பு உரிமை எதுவும் தொழிலாளர்களுக்கு இல்லை என்று முடிவு செய்து,இந்திய மற்றும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள்.

இதன் அடுத்த கட்டமாக,இப்போது, தமிழ்நாட்டுத் தொழிலாளிகளை – ஊழியர்களைப் பணியமர்த்த புதுமுறையாக – கடந்த நூற்றாண்டுகளில் வெளிநாடுகளில் வேலை வாங்கிய அடிமை முறையைத் தமிழ்நாட்டிற்குள்ளேயே கொண்டு வந்துவிட்டார்கள்!

வெறும் தொழிலாளர் உரிமை,தொழிற்சங்க உரிமை என்று பேசித் தொழில் நடத்தும் தொழிற்சங்கவாதிகளால் இப்போது வந்துள்ள கொத்தடிமைத் தொழிலாளர் திட்டத்தை முறியடிக்கமுடியாது.கற்ற கல்விக்கேற்ற வேலையோ – வேலைக்கேற்ற ஊதியமோ – ஊதியத்துடன் விடுமுறைகளோ எதுவும் அற்ற கொத்தடிமை ஊழியர் திட்டம் இது!

தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் மண்ணின் மக்கள் – தமிழ்நாட்டின் ஆட்சிமுறை – வேலைமுறை, வேலை வாய்ப்பு உரிமை அனைத்தையும் முடிவு செய்யக்கூடிய – “தமிழர்” என்ற தேசிய இனத்தவர்,தங்களைத் தாங்களே ஆளப்பிறந்தவர்கள் என்ற மனிதஉரிமைப் பார்வையைச் சிந்திப்பவர்களால் மட்டுமே,விசய் ஆட்சியின் “கொத்தடிமை ஊழியர் அமர்த்தல் திட்டத்தை” முறியடித்துத் தடுக்கமுடியும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் மனித உரிமைகள் – தமிழர் உரிமைகள் இரண்டும் அடிப்படை உரிமைகள் என்ற உணர்வுடன் சனநாயக மீட்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. “அனைவரும் அவரவர்க்குள்ள வாய்ப்புகளின்படி விசய் அரசின் கொத்தடிமை ஊழியர் திட்டத்தை முறியடிக்க ஒன்று திரள்வீர்” என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response