
பால் மற்றும் பால் பொருட்களை தயாரித்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.இது தமிழக அரசு நிறுவனம்.தீபாவளி நெருங்கும் நிலையில்,ஆவின் பொருட்களைக் கூடுதலாக உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது வழக்கம்.இந்நிலையில், நெய்,வெண்ணெய்,தயிர் உள்ளிட்ட 67 ஆவின் பொருட்களின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.மூலப்பொருட்களின் விலை,பால் கொள்முதல் செலவு மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பால் நெய்,மில்க் ஷேக் உட்பட 67 ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 100 கிராம் வெண்ணெய் ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆகவும், 100 மி.லி. நெய் ரூ.85-ல் இருந்து ரூ.95 ஆகவும், 100 கிராம் ரசகுல்லா ரூ.45-ல் இருந்து ரூ.50 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 250 கிராம் குலோப் ஜாமுன் ரூ.100-ல் இருந்து ரூ.115 ஆகவும், 250 கிராம் மைசூர்பாக் ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆகவும், 200 மி.லி. லஸ்ஸி ரூ.20-ல் இருந்து ரூ.23 ஆகவும், 500 மி.லி. ஆவின் நெய் ரூ.365-ல் இருந்து ரூ.400 ஆகவும் அதிகரித்துள்ளது.
200 மி.லி. மில்க் ஷேக் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 500 மி.லி. தயிர் ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. 50 கிராம் பிரிமியம் தயிர் கப் ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆகவும், ஒரு கிலோ பிரிமியம் தயிர் ரூ.120-ல் இருந்து ரூ.130 ஆகவும் அதிகரித்துள்ளது. பெட் பாட்டிலில் விற்கும் மோர் ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதோடு இன்னொரு கருத்தும் வேகமாகப் பரவிவருகிறது.
அது என்னவெனில்?
அண்மையில் ஆந்திராவுக்குச் சென்று வந்தார் தமிழக முதல்வர் விஜய்.அப்போது,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவருடைய பால்பொருட்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையை தமிழ்நாட்டில் உயர்த்த ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.அதை ஏற்றே ஆவின் தயாரிப்புகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளன.இது மறைமுகமாக சந்திரபாபு நாயுடு நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்கிற விமர்சனங்கள் வருகின்றன.


