
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அருண்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவில்பட்டி காமராஜர் சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாலையில் பரப்புரை செய்தார்.
அப்போது சீமான் பேசியதாவது:-
தமிழகத்தில் லஞ்சம், ஊழல், பசி, பட்டினி, சாதிய கொடுமைகளைக் களையவும், அனைவருக்கும் தரமான மருத்துவம், தூய குடிநீர், வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தை சந்திக்கிறது. இது போர்க்களம் போன்றது. இதுவரை பணம் படைத்தவர்கள்தான் நம்மை ஆட்சி செய்து உள்ளனர். இந்த பணநாயகத்தை அகற்றி விட்டு, ஜனநாயகம் மலர பாடுபடுகிறோம்.
தமிழகத்தில் 2 தவணை பாக்கிக்காக ஏழை விவசாயியை போலீஸ் துணையுடன் தாக்கி, கடனுக்கு வாங்கிய டிராக்டரை பறித்து சென்றனர். அவமானத்தில் அந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். ஆனால், விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடிக்கு வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு, வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதனை தடுக்க வேண்டும்.
கூடங்குளம் அணுஉலையை நிறுத்த வேண்டும். மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதலை நிறுத்த வேண்டும். கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாயை தமிழகத்தின் விவசாய நிலங்களின் வழியாக பதித்து கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளங்கள், பள்ளிக்கூடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன.
தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கல்வி விற்பனை கிடையாது. நாம் 2,500 டி.எம்.சி. தண்ணீரை வீணாக கடலில் விட்டு விட்டு, 272 டி.எம்.சி. தண்ணீருக்காக பக்கத்து மாநிலத்திடம் போராடுகிறோம். மழைநீரை சேமிக்க புதிய அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளங்களை அமைக்காத அரசு, பொதுமக்களிடம் வீடுகளில் மழைநீரை சேமியுங்கள் என்று கூறுகிறது.
ஆற்று மணலை திருடுவதால் தண்ணீர் சேமிக்கப்படாமல் வறட்சி ஏற்படுகிறது. வீரிய விதைகளின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகளை கேரளாவில் வாங்க மாட்டார்கள். நாட்டு காய்கறிகள்தான் சத்து மிகுந்தது. பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்சி மாட்டின் பாலை அருந்துவதால் புற்றுநோய், நுரையீரல் நோய், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அந்த மாட்டின் சாணத்தைக்கூட பயன்படுத்த முடியாது.
தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ரூ.29 ஆயிரம் கடனில்தான் பிறக்கிறது. எந்த ஒரு தாயும் தன்னுடைய மகன் மது அருந்துவதை விரும்ப மாட்டார். மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்றால் படிப்படியாக மூடுவதற்கு பதிலாக, ஒரேயடியாக மதுக்கடைகளை மூடுவேன் என்று வாக்குறுதி அளிக்க வேண்டியது தானே? பணத்துக்காக வாக்குகளை விற்பது அவமானம். நாம் தன்மானத்தோடு வாழ வேண்டும் இவ்வாறு சீமான் பேசினார்.


