
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 10 அன்று,நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று கடையநல்லூர் ராசேந்திரன் (திமுக) பேசும்போது,குமரி மாவட்டத்தின் மாப்பிள்ளை என்கிற முறையில் நிதியமைச்சர் மரியவில்சனுக்கு என் வாழ்த்துகள்.அவர் பட்ஜெட்டை படித்தபோது ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது.தமிழில் சில சொற்கள் இலக்கணப் பிழையாக இருந்தது.அமைச்சர் ராஜ்மோகன் அவருக்குத் தமிழ் கற்றுத்தர வேண்டும் என்று பேசினார்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மரியவில்சன்,முதலில் உருவகேலி செய்தார்கள் இப்போது மொழியை வைத்து கேலி செய்கிறார்கள்.எனக்கு,கிறிஸ்துவம் ஒருமொழியைக் கற்றுத் தந்துள்ளது.அது அன்பு மொழி.தமிழ் படித்தாலும் அது எனக்கு தெரியாது20,30 வருஷமாக நான் கல்வித் துறையில் இருக்கிறேன்.எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச முடியும்.தமிழ் இப்போது கற்றுக்கொண்டு இருக்கிறேன். சட்டமன்றத்தில் தன்னை தொடர்ந்து சில நாட்களாக கேலி செய்து பேசுகிறார்கள். நான் இப்படித்தான் பேசுவேன். உங்களால் ஏற்றுக்கெள்ள முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், நான் மாற்றிக்கொள்ள முடியாது என்று கோபத்துடன் கூறினார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் பொழிலன் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….
அமைச்சர் மரியவின்சனுக்குத் தமிழ் தெரியாமல் இருப்பது குற்றமில்லை.ஆனால் குறைபாடு.
அந்தக் குறைபாட்டைக் காலத்தால் படித்து சரி செய்துகொள்கிறேன் என்று சொல்லியிருந்தால் தாழ்வில்லை. ஆனால்,அப்படிச் சொல்லாமல்,நான் பிறப்பால் கிறித்தவன்,அப்படித்தான் பேசுவேன்,மாற்றிக்கொள்ள முடியாது.. என்றெல்லாம் பேசியது கண்டனத்திற்குரியது.
அன்பும் அமைதியும் இரக்க உணர்வும் இவர் காட்டுகிற பைபிளை விட ஆழமாக,அறம்,அன்பு,அருள்,ஈகை, நல்குரவு என்கிற பெயர்களில் நூற்றுக்கணக்கானத் திருக்குறளிலும் தமிழ் இலக்கியங்களிலும் விளக்கப்பட்டு இருக்கிறது.விருந்தோம்பல் பண்பு தமிழிலேயே தலைசிறந்திருப்பதை உலகம் வியந்திருக்கிறது.
ஆனால்,தான் பிறந்த தமிழ்இனத்தைப் புறந்தள்ளிவிட்டு,தமிழ்மொழியை அதன் இலக்கியங்களை,வாழ்வியலை பைபிளைவிடக் குறைத்து இழித்துப்பேசுவது மிகமிகக் கண்டனத்திற்குரியது.
அமைச்சர் மரியவில்சன் தமிழையும்,தமிழர்களின் வாழ்வியல் பண்பையும் குறைத்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


