
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுடன், தமிழ்த் தேசியப் பேரவையினரின் சந்திப்பு 03.07.2026) மாலை சுமார் 5.00 மணியளவில், சென்னை கேகே நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் நடந்தது.
அன்றைய தினம் காலை தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்ததைத் தொடர்ந்து,மாலை நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழீழத்திலிருந்து வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்;
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கேசன்,ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவர்,ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ்,உத்தியோகபூர்வப் பேச்சாளர் க.சுபாஸ் மற்றும்
கொள்கை பரப்புச் செயலாளர்,சிரேஷ்ட சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது, இலங்கையில் தமிழர்களின் அரசியல் பிரச்சினை தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக,ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் தமிழர்களின் தேசியஇனப் பிரச்சினையை உள்வாங்கும் வகையிலான எந்தவொரு அரசியலமைப்பு ஏற்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும்,ஏக்யராஜ்ய அரசியலமைப்பை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசும்,தமிழ்நாட்டு மக்களும்,இந்திய மத்திய அரசின் ஊடாக இலங்கை அரசின் மீது உரிய அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைச் செலுத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.
அதேவேளை,தமிழர்களின் தேசம்,இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய அடிப்படை அரசியல் அங்கீகாரங்களை அடிப்படையாகக் கொண்ட,சமஷ்டி அடிப்படையிலான நிலையான அரசியல்தீர்வே தமிழ்மக்களின் நீண்டகால தேசிய இனப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வாகும் என்பதையும் எடுத்துரைத்தோம்.
மேலும்,நீண்டகாலமாக இலங்கைத் தமிழர் மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் நிலவிவரும் கடல்சார் மீன்பிடிப் பிரச்சினைக்கு,நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன்,தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டதோடு,அதற்கான தமிழ்நாட்டின் தொடர்ச்சியான அரசியல் ஆதரவும் கோரப்பட்டது.
இதேவேளை,தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்சினைகளுக்கு மனிதாபிமானமும் நிரந்தரத்தன்மையும் கொண்ட தீர்வுகளை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பு பயனுள்ளதொரு அரசியல் கலந்துரையாடலாக அமைந்ததுடன்,தமிழர் தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து இருதரப்பினரும் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.


