கரூர் வழக்கில் சாட்சிகளை மிரட்டுகிறார் ஆதவ் அர்ஜுனா – புதிய புகார்

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் பரப்புரையில் ஈடுபட்டார்.அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது.வழக்கை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.இதுதொடர்பாக பல கட்ட விசாரணையை சிபிஐ முடித்திருக்கிறது.சம்பவம், தவெக தலைவர் விஜய்யின் முன்னிலையில் நடந்தது என்பதால் அவரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர்.இதன்பேரில் விஜய் 2026 ஜனவரி மாதம் 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் ஆஜரானார்.தொடர்ந்து 3 ஆவது முறையாக மீண்டும் அவரை அழைத்தனர்.
மார்ச் 10 ஆம் தேதி அவர் ஆஜராகி இருக்கவேண்டும்.ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் சூழ்நிலையை காரணம் காட்டி அவர் மறுதேதி கோரினார்.இதன் அடிப்படையில் 15 ஆம் தேதி விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை நடைபெறவில்லை.

இந்தநிலையில்,கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கியுள்ளது.சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உட்பட்ட 10 காவலர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்கள் விசாரணை மேற்கொண்டனர்.தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்றதையடுத்து கரூர் கூட்டநெரிசல் வழக்கு விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் நேற்று முன்தினம் இணைந்தனர்.இந்த இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ளது.அதனை முடிக்காமல் விடமாட்டோம்.சட்டம் தனது கடமையை செய்யும்.கரூரில் கூட்டநெரிசலை காவல்துறையை வைத்து உருவாக்கினார்கள்.விஜய் மீதே கை வைத்தீர்களே,மக்களை கொன்று குவித்தீர்களே.அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்.கடைசி 15 நாட்கள் விஜய் ஏன் பல ஊர்களுக்கு செல்லவில்லை என்றால்,அதற்கு காரணம் இருக்கிறது.கரூர் கண்ணீருக்கு காரணமாக இருந்த பாவத்துக்காகதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.கரூர் சம்பவத்திற்கு காவல்துறையும்,திமுகவும்தான் முக்கிய காரணமாக இருந்தனர் என்று தெரிவித்திருந்தார்.

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் அமைச்சரின் இந்தப்பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இநநிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார்.அதில் கூறியிருப்பதாவது….

கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பல்வேறு சட்டத்திற்கு புறம்பான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.அவர் பேசுவது வழக்கின் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.வழக்கில் இருக்கும் சாட்சிகளை கலைப்பதற்கான வழிவகையை உருவாக்கும். எனவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவேண்டும்.இதுகுறித்த உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு,கருணை அடிப்படையிலான அரசு வேலை,அரசாணைகள் மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை வழங்க மாநில அரசுக்கு சுதந்திரம் இருந்தாலும்,சிபிஐ விசாரணை காலத்தில்,உச்சநீதிமன்றம் வகுக்கும் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே அவை வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நடவடிக்கை தொடர்பாக செல்வாக்கு செலுத்துதல்,சாட்சிகளை மிரட்டுதல், விசாரணைக்கு தடையாக இருத்தல்,பொது அறிக்கைகள் வெளியிட்டது ஆகிய அனைத்தையும் அடிப்படையாக கொண்டு புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மத்திய புலனாய்வு பிரிவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.குறிப்பாக தற்போதைய வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், நீதியின் நலன் கருதியும்,விசாரணையின் நேர்மை,சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும்,உச்சநீதிமன்றம் பொருத்தமான மற்றும் சரியான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்தமனு,உச்சநீதிமன்றத்தில் அடுத்த ஒருசில நாட்களில் அவசர வழக்காக விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response