
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது….
ஜென்சி இளைஞர்கள் பேசுவதைக்கூட முதலமைச்சரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.திருடனைப் பிடிப்பது போல காவல்துறையினர் வீடுகளுக்குச் செல்கிறார்கள்.சமூகவலைதளத்தில் ஒரு செய்தியை வெளியிட ஒருவரைத் தடுத்தால்,அதேசெய்தியை ஒரு இலட்சம் பேர் வெளியிடுவோம்.
திமுக மிசாவையே பார்த்த கட்சி.பல்வேறு அடக்குமுறைகளைக் கண்டுள்ளோம்.இதுபோன்ற பூச்சாண்டிகளை விஜய் காட்டமுடியாது.திமுகவின் வரலாறைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.நேற்று சட்டப்பேரவையில் ஆடியதைப் போல,இன்று ஆடமுடியாது.மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
சைதாப்பேட்டையில் திமுகவை சேர்ந்த ‘ஜென்சி’ இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் புகார் அளித்து 3 நாட்கள் ஆகிறது.திமுக ஆதரவாளரான ஜென் ஸீ இளைஞர் கனிஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில்,இன்னும் 24 மணிநேரத்தில் தவெகவைச் சேர்ந்த குற்றவாளிகள் மீது எப்ஐஆர் போடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால்,சைதாப்பேட்டை காவல்நிலையம் முன்பு திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.இது பெரியார் பூமி.தமிழக மக்கள் இந்த மாயாஜாலங்களுக்கு அடிபணிய மாட்டார்கள்.நடந்தது நடந்துவிட்டது.
தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய்,தமிழ்நாட்டில் நிகழும் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகளில் அக்கறை காட்டாமல்,விஜய் மீது விமர்சனம் வைப்பவர்களை,ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை இந்த அரசு குறிவைக்கிறது.ஒரே இரவில் பாலியல் குற்றம் செய்தவர்களை இந்த அரசு கைது செய்ததா?.ஆனால்,இரவு 10 மணிக்கு சமூகவலைதளத்தில் பதிவிட்டவரை,12 மணிக்கே சென்று பிடிக்க காவல்துறை துடிக்கிறது.
பாலியல் குற்றங்கள்,கொலை,கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு பதிலளிக்காமல்,அதை விமர்சிக்கும் திமுக இளைஞரணியினர்,ஜென் ஸீ தலைமுறையினர் மீது தவெக அரசு தாக்குதல் நடத்தியுள்ளது.இன்ஸ்டா,சமூகவலைதளங்கள் மூலம் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதை மறந்துவிட்டனர்.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால்,விஜய் அரசியலைவிட்டே ஓடிப்போயிருப்பார்.எங்களுக்கு மக்கள் நலனே பெரிதாக இருந்ததால்,நாங்கள் அதை இலேசாக விட்டுவிட்டதன் விளைவு,தவறான பிரச்சாரங்களை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி,அதன்மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார்.அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தினால்,திமுகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதுகுறித்து புகார் அளித்தால்,போலீஸ் எப்ஐஆர் கூட போட மறுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


