
அதிமுகவின் வேட்பாளர்களாக மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற சமஉக்கள் முறையே மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர்,நேற்று முன்தினம் தங்களது பதவியிலிருந்து விலகினர். பிறகு அவர்கள் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இதையடுத்து அம்பாசமுத்திரம் சமஉ இசக்கி சுப்பையாவும் நேற்று தனது பதவியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரை,அதிமுக
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,
ஓ.எஸ்.மணியன்,பாராளுமன்ற உறுப்பினர் இன்பதுரை உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர்.
அப்போது,அதிமுகவில் இருந்து விலகிய சமஉக்களின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று மனு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது….
கடந்த 13 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில்,அதிமுக எம்எல்ஏக்கள்,தவெக அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இருப்பினும் இதனை மீறி நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 25 உறுப்பினர்கள் மீது
கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அளித்துள்ளார்.
அந்தக் கடிதம் பரிசீலனையில் இருப்பதாக பேரவைத் தலைவர் சமீபத்தில் பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில்,தங்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில்,மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.ஏற்கெனவே அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அதிமுகவின் கடிதம் ஆய்வில் இருக்கும் நிலையில்,அவர்கள் பதவியை ராஜினாமா செய்தபோது,அதை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது விதிகளுக்கும் சட்டத்துக்கும் முரணானது.
எனவே அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அதிமுக சார்பில் மனு அளித்துள்ளோம்.
முதல்வர் சட்டப்பேரவையில் பேசும்போது,எங்கள் அரசு குதிரை வேகத்தில் செயல்படும் என்று கூறினார்.ஆனால் இந்த அரசில் காலையில் ராஜினாமா செய்தவர்களுக்கு 5 நிமிடங்களில் கட்சியில் சேர்த்து உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.இது தலைமைச் செயலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா என்று தெரியவில்லை.
இந்த அரசு குதிரைபேரத்தை குதிரை வேகத்தில் நடத்துவதாக பொதுமக்களும்,அரசியல் கட்சியினரும் கூறுகின்றனர்.தூய்மையான ஆட்சியைத் தருவதாகக் கூறிய முதலமைச்சர்,முறைகேடாக பின்வாசல் வழியாக தனது ஆட்சியை நிலைநிறுத்த குதிரைபேரத்தை குதிரை வேகத்தில் நடத்துகிறார்.சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஐந்து பேர் தாங்கள் செய்த தவறை உணர்ந்து,பொதுச்செயலாளரிடம் மன்னிப்புகோரி பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்துள்ளனர்.மேலும்,எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராஜினாமா செய்த உறுப்பினர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி குதிரைபேரத்தில் ஈடுபட்டு பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இன்பதுரை….
நாங்கள் கொடுத்த மனுவின் அடிப்படை என்னவென்றால்,கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்த பிறகும்,அதைமீறி பேரவைத்தலைவர் எப்படி ராஜினாமாவை ஏற்கமுடியும்? அறிவிப்பு வந்த பிறகுதான் ராஜினாமா செல்லுபடியாகும்.அறிவிப்பு வருவதற்கு முன்பே அவர்கள் மற்றொரு கட்சியில் சேர்ந்துள்ளனர்.அப்படி இருக்கும்போது அந்த ராஜினாமாவை ஏற்கக்கூடாது.சட்டப்பேரவைத் தலைவரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று பொய்யாக நம்புகிறார்கள்.இது தவறு.எந்த அரசாணை வெளியிட்டாலும் அதை திரும்பப்பெறும் அதிகாரம் இருக்கிறது என்றார்.
அதிமுகவின் இந்த நடவடிக்கை பேரவைத் தலைவருக்கும் தவெக ஆட்சிக்கும் சிக்கல் ஏற்படுத்தக்கூடியது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


