சிங்களக் கைக்கூலி யாழ்ப்பாணம் அர்ச்சுனா – பெ.மணியரசன் ஆவேசம்

செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப் பேசிய யாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இலங்கை நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக உள்ள யாழ்ப்பாணம் இராமநாதன் அருச்சுனன் என்ற நபர், நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களைச் சுட்டுத்தள்ளுவேன் என்றும், இழிவுபடுத்தியும் பேசியதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழினப் பேரழிவு தமிழீழத்தில் 2009 – மே மாதம் நடந்த பின்,அதுகுறித்து இரங்கல் கூட்டம் நடத்தவோ, கண்டனக் கூட்டம் நடத்தவோ தமிழ்நாட்டில் அனுமதியில்லை.ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் சிங்கள வெறியர்கள் படுகொலை செய்தபின், வெளிப்படையாக அழுவதற்குக்கூடத் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை! இந்திய ஏகாதிபத்தியக் காங்கிரசு – கங்காணி தி.மு.க. கூட்டணி ஆட்சி,அவ்வளவு கெடுபிடிகளைச் செய்தது.

ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கவோ,தலைவர் பிரபாகரன் படத்தை வெளிப்படையாக வைக்கவோ அவர் பெயரை உச்சரிக்கவோ தமிழ்நாட்டில் அனுமதி இல்லை!அந்தக்கொடுமையை எதிர்த்து,பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைத் திரட்டி தமிழீழப் படுகொலைகளைக் கண்டித்துக் கூட்டம் நடத்தியும், வெளிப்படையாக பிரபாகரன் படத்தை வைத்து,அவரை எங்கள் தலைவர் என வணங்கவும் நடைமுறை அனுமதியை (Defacto permission) பெற்றுத் தந்தவர் செந்தமிழன் சீமானும்,அவர்கட்சிப் பிள்ளைகளும் ஆவர்!

இலங்கையில் தமிழின அழிப்பின் தலைமைக் குடும்பமான இராசபட்சே குடும்பத்தின் கொத்தடிமைதான் இந்த இராமநாதன் அருச்சுனா என்று கேள்விப்படுகிறோம்.நாமல் இராசபக்சே எனது சகோதரன் என வெளிப்படையாகச் சொன்னவர் இராமநாதன் அருச்சுனா!அப்படிப்பட்ட அந்த நபரை அழைத்து தோழர் திருமாவளவன் அவர்கள் 18.05.2026 அன்று சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தி இருப்பது மர்மமாக உள்ளது. இதில் மறைக்கப்பட வேண்டிய மர்மம் எதுவும் இல்லை என்றால்,அந்நபரை உரையாற்ற அழைத்ததற்கான காரணத்தை தோழர் திருமா வெளிப்படையாகச் சொன்னால்,உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வெளிச்சம் கிடைக்கும்.

சென்னை தலைமைச் செயலகம் வந்த இராமநாதன் அருச்சுனா தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களையும் நேரில் சந்தித்துப் பேசிவிட்டு,ஊடகங்களில் பல அவதூறு கருத்துகளையும் அள்ளிவீசிவிட்டுச் சென்றுள்ளார். இலங்கை திரும்பிய கையோடு, மே 18 அன்று அங்கு இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களர்கள் மனம் குளிரும்படி அண்ணன் சீமான் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டுமென்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் உட்பட – தமிழீழத் தமிழர்கள் அனைவரும் சிங்களக் கைக்கூலியாகச் செயல்படும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவை மேற்படி இழிவு பேச்சுக்காக மன்னிப்புக் கேட்கும்படி கோரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response