
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், இரா.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கி விஜய் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து,எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அவருடைய ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளைப் பறித்து, அந்த இடங்களில் தனது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த நடவடிக்கைகள் செல்லாது என அறிவித்த எஸ்.பி.வேலுமணி தரப்பு, பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழலில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை மே 19 அன்று கூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்தக்கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்,முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன்,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,தளவாய் சுந்தரம்,கருப்பண்ணன் உட்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளிக்கும் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வெல்லமண்டி நடராஜன், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் 80-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்…
இந்தக்கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டதன் காரணமாக,அதிமுகவில் 47 பேரும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 6 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதற்கு முழுமுதற் காரணமாக விளங்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மாவட்டச் செயலாளர்களும்,தலைமை நிர்வாகிகளும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.அதேபோல்,எடப்பாடி பழனிச்சாமிக்கு அனைவரும் தங்களது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாக உறுதிபடத் தெரிவித்தனர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்…
அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடவேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்தக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.நடந்து முடிந்த தேர்தலில் ஒரு நாகரிகமான வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம்,நாம் படுதோல்வி அடையவில்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.ஆனால் அதிமுக
பொதுச்செயலாளர்தான் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.பொதுக்குழு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்றார்.
ஆனாலும்,பொதுக்குழுவைக் கூட்டியே தீர வேண்டும் என்ற முடிவில் எஸ்.பி.வேலுமணி தரப்பு திடமாக உள்ளது. பொதுக்குழுவைக் கூட்டினால்,அது தனது பொதுச்செயலாளர் பதவிக்கே ஆபத்தாக முடியும் எனக் கருதுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.எனவே, பொதுக்குழுவை தற்போது கூட்டும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.
தலைவர்கள் இப்படி மோதிக்கொள்வதால்,அதிமுக தொண்டர்கள் கடும் வேதனையில் உள்ளனர்.


