கட்டாய இந்தித் திணிப்பு – திமுக அதிமுக மதிமுக கடும் எதிர்ப்பு

புதுச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026 – 27 கல்வியாண்டு முதல், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆவது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’ இன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர்.புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. கல்வி முறையில் இயங்கி வரும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பிலிருந்து பிரெஞ்ச் மொழி நீக்கப்படும் என்றும் இந்தி கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்த பள்ளிகளுக்கு ஒரு வார கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு திமுக, அதிமுக,மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறியதாவது….

மாணவர்களிடையே பன்மொழித் திறனை வளர்க்கிறோம் என்ற பெயரில் மும்மொழிப் பாடத்திட்டத்தின் திணிப்பினால், ஒரு வெளிநாட்டு மொழி, இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று சொல்லி, ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்விச் சுமையை அதிகரிப்பதோடு, அவர்களின் இயல்பான கற்றல் முறையையும் பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.

போதுமான தயாரிப்புகள் இன்றி, பாடம் எடுக்க புத்தகங்கள் கூட இன்றி, இவ்வளவு அவசரமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவது கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த அறிவிப்பு புதுச்சேரி மண்ணின் தனித்துவமான பிரெஞ்சு கலாச்சார அடையாளத்தையும் அதன் நீண்டகால மொழி வரலாற்றையும் சிதைக்கும் வஞ்சகச் செயலாகும்.

புதுச்சேரி பூர்வகுடி மக்களின் உரிமையை இது நேரடியாகப் பறிக்கிறது.மேலும்,பல ஆண்டுகளாக பிரெஞ்சு மொழி பயிற்றுவித்து வரும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வேலை வாய்ப்பையும் இந்தத் தன்னிச்சையான முடிவு கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் பன்முகத் தன்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கையே (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மாணவர்களின் எதிர்காலத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் உண்மையான பாதுகாப்பு என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சையான முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.புதுச்சேரி மாநில திமுக சார்பில் கல்வித் துறையைக் கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்….

சிபிஎஸ்இ பாடத்தில் மூன்று மொழிகள் கொண்டு வருவதில் உள்ள அறிவிப்பால் மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.புதுச்சேரியில் தமிழ்நாடு கல்வி வாரியம் பின்பற்றப்படுகிறது. தனியாகக் கல்வி வாரியம் இல்லை.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருமொழிக் கொள்கை மட்டுமே ஏற்று உறுதியாக இருந்தார்.புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

புதுச்சேரியைப் பொருத்தவரை பல தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்படுவது இல்லை.மத்திய அரசு சொன்னவுடன் செய்ய வேண்டியதில்லை.மாணவர்கள் பாதிக்காத வகையில் மும்மொழிக் கொள்கையை விசயத்தை அமல்படுத்த அரசு சீரான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.மும்மொழிக் கொள்கை அவசியமற்ற ஒன்று.இருமொழிக் கொள்கைக்குத்தான் அதிமுக ஆதரவு உண்டு என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….

இந்த கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. கல்விமுறையில் இயங்கிவரும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பிலிருந்து பிரெஞ்ச் மொழி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலம் பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு தொடர்புடைய மக்கள் வாழும் மாநிலமாகும்.இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் புதுச்சேரியிலும் பிரெஞ்சிலும் இன்னமும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புவரை பிரெஞ்ச் மொழி படித்த மாணவர்களின் எதிர்காலம் அங்கு கேள்விக்குறியாகி உள்ளது.பிரெஞ்ச் மொழி கற்பித்த ஆசிரியர்களின் வேலை குறித்த கவலையும் அங்கு ஏற்பட்டுள்ளது.எனவே ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, மீண்டும் பிரெஞ்ச் மொழியை அங்குள்ள பள்ளிகளில் கற்பிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

இதைப்போலவே, ஒன்றிய பாஜக அரசு ரயில்வே துறையில் 2 சதவீதம்ஆள் குறைப்பு என்ற அநீதியை ஆரவாரமின்றி இழைத்துள்ளது.ரயில்வே துறையில் உள்ள 14.8 இலட்சம் பணியிடங்களில் தற்போது 11 இலட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன.3 இலட்சம் பணி நியமனங்கள் நிரப்பப்படாத சூழ்நிலையில் அங்குள்ள பணியாளர்கள் கூடுதல்சுமையுடன் பணியாற்றி வருகிறார்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இந்த ஆள்குறைப்பு நடவடிக்கை தொழிலாளர் விரோத நடவடிக்கை ஆகும்.இதை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response