சுந்தர்.சி குஷ்பு மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு – விவரம்

மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது….

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக வேட்பாளராக புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி மற்றும் அவரது மனைவி நடிகை குஷ்பு ஆகியோர் தாங்கள் நடத்தி வரும் 3 திரைப்பட நிறுவனங்களின் பல கோடி ரூபாய் வருமானத்தை மறைத்து, மதுரை வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர். அவர்களது பிரமாண பத்திரத்தில் 2024 இல் சுந்தர்.சி ரூ.80 இலட்சம், குஷ்பு ரூ.49 இலட்சம் என தங்கள் சுயவருமானமாகக் காட்டியுள்ளனர். ஆனால், கம்பெனி, ஷேர் தொடர்பான விபரம் குறிப்பிடும் இடத்தில், கம்பெனி ஏதும் இல்லை என சுந்தர்.சி குறிப்பிட்டுள்ளார்.

2021 இல் நடிகை குஷ்பு பாஜக சார்பாக சென்னை ஆயிரம்விளக்கில் போட்டியிட்ட மனுவைப் பரிசீலித்தபோது, அந்த அபிடவிட்டிலும் கம்பெனி ஏதுமில்லை என்றே குஷ்பு தெரிவித்துள்ளார்.

உண்மையில் சுந்தர்.சி, குஷ்பு ஆகிய இருவரும் அவ்னி சினிமேக்ஸ், அவ்னி மூவிஸ், அவ்னி டெலிமீடியா என்ற 3 நிறுவனங்களின் உரிமையாளர்கள். 2004 முதல் 2025 வரை இந்நிறுவனங்களின் மூலம் ஐந்தாம்படை, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, அரண்மனை 2, அரண்மனை 4 உள்ளிட்ட 22 சினிமாக்களுடன், 19 சீரியல்களும் எடுத்துள்ளனர்.

இதில் அதிகாரப்பூர்வமாக வந்த வருமானம் அரண்மனை 4 இல் மட்டுமே ரூ.100 கோடி. அரண்மனை 2 க்கு ரூ.70 கோடி, அரண்மனை 3 க்கு ரூ.24 கோடி என இதன் மூலம் மட்டுமே ரூ.194 கோடி வருவாய் பார்த்துள்ளனர். இவை தவிர மற்ற படங்கள் ரூ.50 கோடி வரை பட்ஜெட் வைத்து, ஒரு படத்திற்கு ரூ.20 கோடி என்றாலும் மொத்தம் ரூ.360 கோடி வரையிலும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

ஏற்கனவே உள்ள ரூ.194 கோடியுடன், சினிமா மற்றும் 10 சீரியல்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் ரூ.600 கோடிக்கும் அதிக வருமானம் கிடைத்திருக்கும். இதற்கு ரூ.180 கோடி வரை வரி கட்டியிருக்க வேண்டும். சாட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமம், இடையில் வரும் விளம்பர வருவாய் என சேர்த்தால் இந்த வருவாய் ரூ.700 கோடியைத் தொடும். இவர்கள் எப்படி மக்களுக்கு உண்மையாக இருப்பார்கள்.

வேட்பு மனுவில், 19(1)ஏ-யின் படி வாக்காளருக்கு வேட்பாளர் அனைத்து விபரங்களையும் வழங்குவது கடமை. சொத்து, வழக்கு விபரங்களை அறிந்து வாக்காளர் விழிப்புணர்வு பெற்று, அதன்பேரில் வேட்பாளரை தெரிவு செய்வதற்காகத்தான் இது கேட்கப்படுகிறது. இந்த அடிப்படை உரிமையில் தவறான தகவல் வழங்கலாமா?. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 125ஏ-ன் கீழ் தகவலை மறைத்த இருவருக்கும் 6 மாதம் சிறைத்தண்டனை, குற்றம் நிரூபணமானால் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை என இவர்கள் தேர்தலிலேயே நிற்கமுடியாத நிலை ஏற்படும்.

இதற்கு வருமானவரித்துறையில் பல மடங்கு அபராதமும், அமலாக்கத் துறை நடவடிக்கையும் இருக்கும். பிரமாண பத்திரத்தில் உண்மையை மறைத்ததற்கு தேர்தல் அதிகாரி புகார் தந்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் இருவர் மீதும், நீதிமன்றத்தில் நாங்கள் குற்றவியல் வழக்கு தொடர்வோம். தங்களது நிறுவனங்களைக் காட்டிவிட்டு, தொழில் நஷ்டம் என்று கூட தெரிவித்திருக்கலாம். மொத்தமாக மறைத்து, மதுரை வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response