உங்களுக்கு ஏன் எரியுது? – எச்.ராஜாவை வெளுத்த குஷ்பு

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனிடையே நேற்றிரவு (மே 12) 8 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி தனது பேச்சில் உலக அளவில் கொரோனாவின் தாக்கம் குறித்தும், இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்தும் நீண்ட நேரம் பேசினார். இதனால் இணையத்தில் பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள்.

இறுதியாக கொரோனாவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார் பிரதமர் மோடி. பின்பு 4 ஆவது ஊரடங்கு இருக்கும் எனவும், ஆனால் அதில் பெரும் தளர்வுகள் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும்போது காங்கிரசுக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பதிவில், “அய்யோ.. பாயிண்டுக்கு வாங்க சாமி. சமைக்கணும். அவர் சொல்வது அனைத்தும் நடந்து கொண்டிருக்கும் எதற்கும் முற்றிலும் தொடர்பில்லாததாக இருக்கிறது. இறுதியாக ஒரு திட்டம், நாட்டின் வளர்ச்சியில் 10% தயாராக இருங்கள். நமக்கு அதிக அளவிலான வரிகள் வரிசையாக வரப்போகின்றன. எதிர்காலத்தில் பொறுத்திருந்து பாருங்கள். 8 மணி என்னாச்சு. வெறு காத்துதான் வந்தது. போங்கடா.. என் சமையலாவது நேரத்துல முடிச்சிருப்பேன். நேரம் வீணாப் போச்சு” என்று தெரிவித்தார்.

குஷ்புவின் இந்தக் கிண்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தனது பதிவில் “முதலில் தமிழை தமிழில் எழுதக் கற்றுக் கொள்ளவும். நான் 4 ஆண்டுகள் தான் ம.பி.யில் இருந்தேன். இந்தியை இந்தியில்தான் எழுதுகிறேன். பிரதமர் சுயசார்பு பற்றிப் பேசியுள்ளது தங்கள் கட்சித் தலைவரை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்த உங்களுக்கு வீணாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை” என்று கூறினார்.

இதற்கு பதிலுரைத்த குஷ்பு, ”ஏன் உங்களுக்கு எரியுது? நான் எங்குமே பிரதமர் பெயரைச் சொன்னேனா.. சில் பண்ணுங்கள். வெயில் அதிகமாக இருக்கு. தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். அதை உங்களிடம் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வணக்கம்” என்று கூறினார்.

இதனால் ட்விட்டர் பக்கம் சூடாகியுள்ளது. குஷ்புக்கு ஆதரவாகவும் எச்.ராஜாவை விமர்சித்தும் ஏராளமானோர் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Response