முகக்கவசம் தயாரிப்பதில் திருப்பூரின் திறமையைப் பயன்படுத்துங்கள் – பிரதமருக்கு சத்யபாமா கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு திருப்பூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, திருப்பூர் தொழில் மையத்தில் உற்பத்தி செய்யப்படும் துணியாலான முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தல் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி 12.05.2020 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்….

​DGFT எனப்படும் அந்நிய வர்த்தகத்துக்கான தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள 19 மார்ச் 2020 தேதியிட்ட அறிவிக்கை எண் 52/2015-2020 தொடர்பாக உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்த அறிவிக்கையின்படி ITCHC குறியீடுகள் ex 392690, ex 621790, ex 630790, ex 901890, ex 9020, 560311, 12, 13, 14, 91, 93, 94 ஆகியவற்றின் கீழ் வரும் அனைத்துவிதமான சர்ஜிகல்/டிஸ்போசபிள் (2/3 இழை) முகக்கவசங்கள் மற்றும் முகக்கவசங்களுக்கான துணி மூலப் பொருட்களையோ ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் பின்னலாடை மூலமாக (அத்தியாயம் 61) தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் தடை செய்யப்படவில்லை.

அத்தியாயம் 61 இன் படி, தடைசெய்யப்பட்ட பிரிவில் வராத பின்னலாடை மூலம் தயாரிக்கப்படும் முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய சுங்க அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. இரண்டு வகையான முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

1)ஒன்று மருத்துவப் பயன்பாட்டுக்கான ஒரேயொருமுறை பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள்.

2)மற்றொன்று பொதுப் பயன்பாட்டுகானவை.

மருத்துவப்பயன்பாட்டுக்கான முகக்கவசம்;

நெய்யப்படாதவையாகவும், பல அடுக்கு துணியால் (2 இழை/3இழை) கொடுத்து காற்று தவிர மைக்ரான் அளவிலான சிறிய துகள்களும் உள்ளே ஊடுருவாதபடியும் இவை அமைந்தவை. ஒரேயொரு முறை பயன்படுத்தவல்ல இந்த முகக்கவசத்தை அதிகபட்சமாக 6 மணிநேரம் வரை ஒரேயடியாக அணியமுடியும். அதன்பிறகு, அதனை குப்பைக்கூடையில் வீசவேண்டும். ஒரு இழை, இரண்டு இழை மற்றும் பாலியுரேதேன் பூசப்பட்டவை, ஐந்து இழையாலான நெய்யப்படாதவை மற்றும் உருக்கி வார்க்கப்பட்ட நெய்யப்படாதவை ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம் அண்மையில் உலக அளவில் அங்கீகரித்தது.

மூலப்பொருட்களை கொள்முதல் செய்ய போக்குவரத்து வசதிகளையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு DRDO மற்றும் இதர ஆராய்ச்சி நிறுவனங்களிடம் இருந்து தொழில்நுட்பப் பரிமாற்றத்தை அரசு வழங்கிடும் பட்சத்தில் ஒரு மாத காலத்திற்குள் நாடு முழுமைக்குமான முகக்கவசத் தேவைகளைத் திருப்பூர் தனது முழுதிறனையும் பயன்படுத்தி உருவாக்கித் தரும் என்பதோடு முகக்கவசங்களை இறக்குமதி செய்வதற்கான தேவையும் ஏற்படவே ஏற்படாது.

பொதுப்பயன்பாட்டுக்கான முகக்கவசங்கள்;

நடப்புச் சூழலில் யாரெல்லாம் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்களோ அவர்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய முகக்கவசங்களை துவைத்து மீண்டும் பயன்படுத்த முடியும்.

ஐயா, நாடு முழுமைக்குமான முகக்கவசத் தேவைகளை பெரும் எண்ணிக்கையில் விரைவில் உற்பத்தி செய்து தரும் ஆற்றல் திருப்பூர் தொழில் மையத்துக்கு உண்டு. நெய்யப்படாத மருத்துவ முகக்கவசங்கள் தனிநபர் தற்காப்பு கவசங்கள் (PPE) ஆகியவற்றையும் பொதுப்பயன்பாட்டுக்கான நெய்யப்பட்ட மற்றும் பின்னலாடை முகக்கவசங்களையும் உற்பத்தி செய்து தருவதில் உள்நாட்டு மற்றும் உலகத் தேவைகளைச் சமாளிக்கும் திறனையும் திருப்பூர் பெற்றுள்ளது.

எனவே துணியாலான முகக்கவசங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை வழங்க மாண்புமிகு பிரதம மந்திரி அவர்கள் ஆவண செய்யவேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறில்லை எனில் திருப்பூருக்கு கிடைத்துள்ள ஆர்டர்கள் அதன் போட்டியாளர்களுக்கு சென்றுவிடுவதோடு திருப்பூர் தனது முழுத் திறனையும் ஆற்றலையும் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுவிடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response