
நீண்டகாலமாக அரசியலில் இருப்பவர் ஜான்பாண்டியன்.தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியின் தலைவராக இருக்கிறார்.கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேல் தேர்தல் அரசியலில் வலம் வந்தாலும் சமஉ,பாமஉ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதி எனும் தகுதியைப் பெறமுடியவில்லை.
முன்பு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் முகமாகப் பார்க்கப்பட்ட இவர, நீண்டகாலமாக பாஜக தலைமையிலான தேசிய சனநாயகல் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார்.
எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருமுறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டும் தோல்வியைச் சந்தித்துள்ளார்.2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவருக்கு இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை தனித்தொகுதிகளில் களம் கண்ட அவர், இந்தமுறை பொதுத்தொகுதியான இராஜபாளையத்தை வாங்கியுள்ளார்.தென்மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தனித்தொகுதி அவரது கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில்ம்,யாரும் எதிர்பாராத வகையில் பொதுத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இது எப்படி? என்பதுதான் இப்போதைய பரபரப்பாக உள்ளது.
இதன் பின்னணி என்ன?
இராஜபாளையம் தொகுதியில் 2011 இல் சமஉவாக இருந்தவர் கோபால்சாமி. நயினார் நாகேந்திரன் மூலம் பாஜகவில் இணைந்த இவர், தற்போது மாநில துணைத்தலைவராக உள்ளார். தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் மூலம் உயர்இடத்திற்குச் சென்றுள்ளார்.தனக்கென தனி செல்வாக்கை உருவாக்கிக் கொண்ட கோபால்சாமி, 2026 இல் இராஜபாளையத்தில் களம் காண தயார் நிலையில் இருந்தார். தன்னால் கட்சிக்குள் வந்து,இப்போதே தனக்கு இணையான இடம்பிடித்துள்ள இவர் போகப்போக தனக்கே போட்டியாக வந்துவிடுவாரோ என நினைத்த நயினார் நாகேந்திரன், எடப்பாடி மூலம் காய்நகர்த்தி அந்தத் தொகுதியை ஜான்பாண்டியனுக்குக் கொடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.
இதற்காக அவர்கள் கூறும் காரணம், ஜான்பாண்டியன் தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றம் விவகாரத்தில் தீவிரமாக உள்ளார்.இராஜபாளையம் தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பட்டியல் சமூகத்தினர் உள்ளனர். இதற்கான முதல்படியாக பொதுத்தொகுதியான இராஜபாளையத்தில் போட்டியிடுகிறார். இங்கு வென்றால் இவர் மூலம் பட்டியல் வெளியேற்றத்தை சாத்தியமாக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இது வெளியில் சொல்லும் காரணம். மறைமுகக் காரணங்களும் இருக்கின்றன. அவர் என்னவென்றால்? ஜான்பாண்டியன் மூலம் தேவேந்திரகுல வேளாளர்களின் ஆதரவை பாஜக – அதிமுக அணிக்கு திருப்புவது,கோபால்சாமியை காலி செய்வது, டாக்டர் கிருஷ்ணசாமியை செல்லாக்காசாக்குவது ஆகியன என்று சொல்கிறார்கள்.
