
தமிழ்நாடு பாஜகவில் தற்போது உட்கட்சிப் பூசல் முற்றி வருவதாக பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாகவும், அண்மையில் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட, ”கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம்” என்று நிர்மலா சீதாராமன் மறைமுகமாக சாடியதாகவும் தகவல் வெளியானது. மேலும், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இடையேயான மோதலும் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அண்ணாமலை தவிர்த்து வருவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் பாஜக உட்கட்சி பிரச்சினைகள் மேலும் வெடித்து, தேர்தலில் பின்னடைவை சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக, டெல்லியில் அவசர அவசரமாக உயர்மட்ட குழுக் கூட்டத்தை தில்லி தலைமை கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், செப்டம்பர் 3 ஆம் தேதி தில்லியில் பாஜக உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், கேசவ விநாயகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவுடனான கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் அதற்கான பொறுப்பாளர்கள் தேர்வு, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பது, பாஜக தேர்தல் பணிக்குழு, தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சட்டப்பேரவை தொகுதிகள், மேலும் தேர்தல் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க இருக்கின்றனர். அதேபோல், சட்டப்பேரவை தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்கள், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் ஆராயப்படுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
வெளிப்படையாக இப்படிச் சொல்லியிருந்தாலும்,உள்ளுக்குள் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை மோதல் குறித்தே பேசவிருக்கிறார்கள் என்றும்,நயினாஎ நாகேந்திரன் தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு,கூட்டணிலிருந்து ஓபிஎஸ் வெளியேறுவதாக அறிவித்தார்.தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் அவர் சரியாகக் கையாளவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால்,அண்ணாமலைக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என்றும் அவர் கூடுதல் பொறுப்புகளை ஏற்பார் என்றும் அதுகுறித்து அறிவிக்கவே இந்தக் கூட்டம் என்றும் சொல்லப்படுகிறது.


